சர்வதேச வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு இல்லை என்றாலும், ஏற்றத் தாழ்வுகளுக்கு ஒருபோதும் இந்தியா காரணமாக இருக்காது’
-பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில், பிப்ரவரி 19-ம் தேதி நடந்த ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உச்சி மாநாட்டில் இப்படி ஓர் உண்மையை பகிரங்கமாகப் போட்டு உடைத்து இருக்கிறார் பாரதத் திருநாட்டின் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி! உண்மைதானே...! பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஏது! (beggars cannot be choosers).
ஆம், நாடு இன்றைக்கு அந்த நிலையில்தான் இருக்கிறது. 'அய்யோ... பாவம் அமெரிக்கா... அடடா, கிரேக்க நாட்டுக்கு இப்படியரு கொடுமையா... எகிப்துக்கு ஏன் இந்த இழிநிலை?' என்றெல்லாம் பொருளாதார ரீதியில் புண்பட்டு கிடக்கும் உலக நாடுகளைப் பார்த்து இப்போது 'உச்' கொட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், 'ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம்... உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்' என்கிற கதையாகத் தான் இருக்கிறது இந்தியாவின் நிலைமையும்!
உதாரணத்துக்கு... 'இந்த ஆண்டு, இந்தியாவில் 320 லட்சம் பேல் என்கிற அளவுக்கு மேல் பஞ்சு (பருத்தி) விளைந்து சாதனை படைத்திருக்கிறது' என்று மத்திய அரசு அறிவித்தது. உள்நாட்டுத் தேவையோ 266 லட்சம் பேல் மட்டும்தான். ஆக, உபரியாக இருக்கும் 50 லட்சம் பேல் பஞ்சை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது அரசு.
உள்நாட்டுத் தேவைக்கும் மேலாகவே கையிருப்பு இருக்கிறது என்றால், சென்ற ஆண்டு விலையில்தான் விற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஒரு கண்டி (356 கிலோ) பஞ்சு 37 ஆயிரம் ரூபாய் வரை எகிறிவிட்டது (சென்ற ஆண்டு அதிகபட்சமாக 27 ஆயிரம் ரூபாய்). பஞ்சு மில் முதலாளிகள் கூப்பாடு போட, பஞ்சு ஏற்றுமதிக்குத் தடை போட்டது அரசு. ஆனாலும், 50 ஆயிரம் ரூபாய் வரை விலை எகிறத்தான் செய்தது. இதன் எதிரொலியாக நூல் விலை இரட்டிப்பானது. பனியன் கம்பெனி முதலாளிகள் கூப்பாடு போட, 'நூல் ஏற்றுமதிக்கும் தடை'! அதற்குப் பிறகாவது விலை குறைந்ததா? இல்லை, 80 ஆயிரம் ரூபாய் வரை எகிறியது!
'பதுக்கல் நடந்திருக்குமோ!' என்று களம் இறங்கிய அதிகாரிகள், 'அப்படி ஏதும் இல்லை' என்று கதையை முடித்துவிட்டனர். தேவைக்கும் அதிகமாகவே விளைந்திருக்கிறது... ஏற்றுமதிக்கும் தடை இருக்கிறது. இருந்தும் விலை உயரக் காரணமென்ன?
இதற்கான பதிலை, கர்நாடக மாநிலத்தில் பருத்தி அதிகமாக விளையும் குல்பர்க்கா மாவட்டத்தில் தெரிந்து கொண்டேன்! அங்கே பருத்தி விதை, களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி என்று விற்பனை செய்யும் ஒரு கடைக்காரர் சொல்வதைக் கேளுங்கள்: 'வழக்கமான பரப்பைவிட, கூடுதலாகதான் இம்முறை பருத்தி பயிர் செய்தனர். கிட்டதட்ட 100% பி.டி. ரக பருத்திதான். ஆனால், விளைச்சல் பாதியாக சரிந்துவிட்டது!
'
'பி.டி. பருத்தியினால், மருந்துச் செலவு குறைவு, விளைச்சல் கூடுவதாகத்தானே எல்லோரும் சொல்கிறார்கள். இவர், நேர்மாறாகச் சொல்கிறாரே!' என்று தோன்றுகிறதல்லவா!
அதற்கும் அவரே பதில் சொன்னார்: 'காய்ப் புழுவுக்கான மருந்துச் செலவு ஒன்றுதான் குறைந்தது. பி.டி. ரக பருத்தி விதைகளைத்தான் எல்லோருக்கும் கொடுத்தேன். பொதுவாக பருத்தியில் 4 அல்லது 5 முறை வெடிப்பு இருக்கும். இந்த பருத்தி, 2 வெடிப்பு வந்துமே... செடி சுருண்டு விட்டது. 60% அளவுக்குத்தான் விளைச்சல். நல்லவேளையாக விலை கூடியதால், விவசாயிகள் தற்கொலை என்கிற நிலை ஏற்படவில்லை.' உண்மை இப்படி இருக்க, ஏ.சி. அறையில் உட்காந்து கொண்டு... 'இந்தியாவில் மொத்தம் பருத்தி பயிரிடப்பட்ட பரப்பளவு... விளைச்சல்...' என்று கம்ப்யூட்டரிலேயே கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டு, புள்ளிவிவரம் என்ற பெயரில் புளுகியிருக்கிறார்கள்! இவர்களுடைய புள்ளிவிவரப் புளுகுக்கு ஏற்கெனவே எத்தனையோ உதாரணங்கள் இருக்கின்றன. அதில், கூடுதலாக ஏறி உட்கார்ந்திருக்கிறது பஞ்சுப் புளுகல்!
உண்மையில், இந்த ஆண்டு 320 லட்சம் பேல் அல்ல... 250 லட்சம் பேல் பஞ்சு விளைந்து இருக்குமா என்பதேகூட சந்தேகமாகத்தான் இருக்கிறது. பஞ்சுப் பற்றாக்குறை காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் கதவடைப்பைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன!
இந்நிலையில்தான் பிரான்ஸ் நாட்டில் நம்முடைய நிதி அமைச்சரின் வாயிலிருந்து உண்மை வெளி வந்திருக்கிறது... உளறலாக! ஆம், இன்றைக்கும்கூட, இந்தியா ஒளிர்கிறது... வல்லரசாகிறது என்றுதானே வெளியில் புளுகிக் கொண்டிருக்கிறார்கள் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும்!
வெறும் 3,000 வி.ஏ.ஓ. பதவிகளுக்கு, 10 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் எனும்போதே... நாடு எப்படிப்பட்ட ஆபத்தான எல்லையில் இருக்கிறது எனத் தெரிந்து கொள்ள வேண்டாமா? விளைச்சல் குறைந்து கொண்டே போனால்... வறுமை, பசி, பட்டினி, கொலை கொள்ளை என்று விஸ்வரூபம் எடுக்கத்தானே செய்யும்? எகிப்து, லிபியா வரிசையில் இந்தியா இடம் பிடிப்பதைத் தடுக்க... ஆண்டவர்களால்.... ஆளப்போகிறவர்களால் முடியாது என்பதே நிதர்சனம்!
No comments:
Post a Comment