Wednesday, 2 February 2011

கறுப்புப் பணமும்... காங்கிரஸின் பயமும்!



ந்தியாவில் முதன் முதலாக ஒரு நிதியமைச்சர், 'கறுப்புப் பணம்
குறித்துப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி தன்னிலை விளக்கம் கொடுத்து இருக்கிறார். அந்தப் 'பெருமைபிரணாப் முகர்ஜிக்​குத்தான்... உச்ச நீதிமன்றம் கேள்வி மேல் கேள்வி கேட்காமல் இருந்திருந்தால், இதைக்கூடச் சொல்லியிருக்க மாட்டார்!
2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி இந்த விவகாரத்துக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது. லீக்டென்ஸ்​டைன் நாட்டு சுவிஸ் வங்கியின் ரகசியக் கணக்குகளை ஒருவர் லீக்-அவுட் செய்தார். இதுதான் இப்போது மத்திய அரசைக் கலக்கும் எல்.டி.ஜி. என்ற வங்கியின் கணக்கு! சுவிஸ், சென்ட் கிட்ஸ், பஹாமாஸ் நாடுகளின் வரிசையில் லீக்டென்ஸ்டைன் ஒரு சின்ன நாடு. ஆஸ்திரியாவுக்கும் சுவிஸ்​ஸுக்கும் இடைப்பட்ட பகுதியில் அரச பரம்பரையின் ஆட்சி இங்கு நடக்கிறது. இங்கு உள்ள எல்.டி.ஜி. வங்கியில் பல நாடுகளின் பணம் மலையாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரெல்லாம் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கை ஜெர்மனியின் ரகசியப் புலனாய்வு அமைப்பு வாங்கியது. இதில் தங்கள் நாட்டு மனிதர்கள் யார் யார் என்று பார்த்துவிட்டு சும்மா தூக்கிப் போடாமல், மற்ற நாடுகளுக்கும் இந்தத் தகவலை இலவசமாகவே கொடுக்க முன்வந்தது. 'ஒளிவு மறைவற்ற சர்வதேசம்என்ற அமைப்பு மற்ற நாடுகளுக்கு இந்தத் தகவலைச் சொன்னது.
இதை முதலாவதாக மோப்பம் பிடித்தார் .ஆர்.எஸ். அதிகாரியான அரவிந்த் கேஜ்ரிவால். 'இது உண்மையா?’ என்று கேட்டு நம்முடைய பிரதமருக்குக் கடிதம் எழுதினார். வழக்கம்​போல் பதில் வரவில்லை. பின்னர், தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின் மூலமாக ஜெர்மனி அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து விவரங்​களை கேஜ்ரிவால் கேட்டார். அப்போதும் அரசு விவரம் தர மறுத்தது. இந்த விஷயம் பி.ஜே.பி. தலைவர் அத்வானிக்குத் தெரியவந்தது. அவர் 2008 ஏப்ரலில் பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அவருக்கும், 'நடவடிக்கை எடுத்து வருகிறோம்என்கிற ஒரு வரி பதில் மட்டுமே கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, பஞ்சாப் முன்னாள் போலீஸ் இயக்குநர் ஜெனரல் கில், முன்னாள் மக்க​ளவை செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப் போன்றவர்கள் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு போட்டார்கள். 'இந்தியர்களில் யாரெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும். குறிப்பாக, லீக்டென்ஸ்​டைன் நாட்டின் எல்.டி.ஜி. வங்கியில் கறுப்புப் பணத்தைப் போட்டுவைத்து இருப்பவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்என்று இவர்கள் கேட்டனர். அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன், இந்த மனுவை ஏற்றுக்கொண்டார். ''48 மணி நேரத்தில் இது தொடர்பான விசாரணையைத் தொடங்​குவோம்...'' என்று மத்திய அரசு கூறியது. அந்த விசாரணைதான் மாதக்கணக்கில் நீடித்து கடந்த 19-ம் தேதி நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு இப்போதுதான் இதைக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. எல்.டி.ஜி. வங்கியில் பணத்தைப் போட்டு இருந்த 26 பேரின் பெயர்களை சீல் வைத்த கவரில் வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி​கள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்சுக்கு மத்திய அரசு வழங்கியது. அத்தோடு, 'இந்த கவரில் இருக்கும் பெயர்களை வெளியிடக் கூடாது!’ என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் வேண்டுகோள் வைத்தார்.
''நீங்கள் எங்களுக்குக் கொடுத்திருக்கும் தகவலைவிட, உங்களுக்கு அதிகமான தக​வல்கள் தெரியும். மனதைப் பதற​வைக்கும் குற்றம் குறித்து நாங்கள் விசாரித்துக்​கொண்டு இருக்கிறோம். நீங்களோ மற்ற நாடுகளுடனான ஒப்பந்தங்கள், சட்ட விதிமுறைகளைப்பற்றி சொல்லி இதை வெளியே சொல்லக் கூடாது என்கிறீர்கள். இந்தக் கறுப்புப் பணத்தின் அளவு அதிகம். நாட்டின் வளத்​தைத் திட்டமிட்டுக் கொள்ளையிட்டுச் சூறையாடி உள்​ளார்கள். பணத்தை சர்வ சாதாரணமாகத் திருடிச் சென்று வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்து இருப்பவர்கள் குறித்து முழுமையான விவரங்களை அரசு தரத் தயங்குவது வேதனை அளிக்கிறது. பொது நலன் கருதி நாங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால், அரசின் அணுகுமுறையோ மிகவும் கவலையைத் தருகிறது. ஆகவே, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க வேண்டாம். ஜெர்மனி வங்கி விவகாரங்கள் மட்டுமல்ல, மற்ற நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தையும் கொண்டுவர வேண்டும்!'' என்று நீதிபதிகள் ஆவேசப்பட்டனர்.
இதைக் கேட்டு மத்திய அரசு சூடானது.
''இரட்டை வரி விதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் இருப்பதால், ரகசிய வங்கிக் கணக்கு வைத்து உள்ளவர்களின் பெயர்​களை வெளியே கூற முடியாது. அப்படி வெளியேவிட்டால், சர்வதேச நிர்பந்தங்களை மீறியதாகும். அதன் பின், எதிர்காலத்தில் எந்த நாடும் இந்தியாவோடு எந்தத் தகவலை​யும் பகிர்ந்துகொள்ளாது!'' என்றார் பிரணாப் முகர்ஜி. இது உச்ச நீதிமன்றத்தை இன்னும் சூடாக்கியது. ''இது வரி ஏய்ப்புப் பணம் என்று அரசே சொல்கிறது. அப்படி இருக்கும்போது, அரசு இதில் என்ன விசாரணையை நடத்தியது? இந்தப் பணத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான புள்ளிகள் யார்? பெயர் சொல்ல முடியாது என்றால், இந்தப் புள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாவது சொல்ல வேண்டுமே? இந்தப் பணம் கிடைத்ததற்கான ஆதாரங்கள் என்ன? ஆயுத பேரமா, கடத்தலா, போதைப் பொருட்களா? இவை குறித்த பதில்களைப் பெற்றுக்கொண்டு வந்து சொல்லுங்கள்...'' என்று நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரலிடம் சுரீரென கேட்டனர். இதோடு ரிசர்வ் வங்கியையும், விஜிலென்ஸ் கமிஷனையும் இந்த விவகாரத்தில் சேர்த்துப் பதில் கூறுமாறு கேட்டனர்.
மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பி.ஜே.தாமஸ் குறித்து மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் எப்படிமுழுப் பூசணிக்காயை முழுங்கியதோ... அதே மாதிரி​தான் கறுப்புப் பணம் குறித்து, மத்திய அரசு பல பூசணிக்காய்களை முழுங்கிய தகவல்கள் கிடைத்து​வருகின்றன.

ஆனால், இந்த விவகாரத்தில் மத்திய அரசும், நிதிய​மைச்சர் பிரணாப் முகர்ஜியும்... பி.ஜே.பி. சொல்லி வரும் கறுப்புப் பணத்தின் அளவைக் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டு விட்டனர். 500 பில்லியன் டாலரில் இருந்து (22 லட்சம் கோடி) 1,400 பில்லியன் டாலர் (63 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று பி.ஜே.பி. சொன்னது. மத்திய அரசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜி.எஃப். என்ற அமைப்புக் கொடுத்த புள்ளிவிவரத்தில் இந்தக் கணக்கு வருகிறது. இந்தியாவுக்கு வெளியேயும், உள்ளேயும் இருக்கும் 

கறுப்புப் பணத்தின் அளவு சுமார் 462 பில்லியன் டாலர் என்றும் இந்த அமைப்பு சொல்கிறது.
நாட்டின் பல பட்ஜெட்களைப் போடும் அளவுக்கு கறுப்புப் பணத்தின் தொகை பிரமிக்க வைக்கிறது. இதனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ''இது ராட்சசத் தொகையாக இருக்கிறது. எத்தனை 'ஜீரோஇருக்கிறது என்றே தெரியவில்லை!'' என்று ஆச்சர்யப்பட்டுச் சொன்னார்கள். உலகக் கறுப்புப் பணத்தில் இந்தியர்கள் பணமே அதிகமாம். அதாவது 60 சதவிகிதம் இருக்கும் என்கிறார்கள். இதனால், பிரதமருக்கும் பிரணாப் முகர்ஜிக்கும் இந்த ஆபரேஷனில் கயிற்றில் நடப்பது மாதிரியான நிலைமையே தொடர்கிறது.
நம்மை ஆண்ட வெள்ளையர்கள் இந்தியாவில் இருந்து கொண்டுசென்றதைவிட, நமது சக்திவாய்ந்த புள்ளிகள் கொள்ளை அடித்து வெளிநாட்டு வங்கி​களுக்குக் கொண்டுசென்றதே அதிகம் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!

No comments:

Post a Comment