Sunday, 27 February 2011

ஒட்டுக்கோவணத்தையும் உருவிப்புடாதீங்க.....


 கூ(ட்)டு விட்டு, கூ(ட்)டு பாய்ஞ்சு, நாட்டு மக்களுக்கு 'நல்லது' செய்றதுக்காகவே கொள்ளைக் கூட்டணி... மன்னிச்சுக்கோங்க வாய் குளறிடுச்சி. 'கொள்கைக் கூட்டணி' போடுறதுக்காக அலைபாய்ஞ்சுகிட்டிருக்கற அத்தனை அரசியல் சிங்கங்களையும்... கும்பிட்டுக்கறான் இந்த கோவணாண்டி!

நான் இல்ல... எவன் என்ன சொன்னாலும் நீங்கள்லாம் திருந்தமாட்டீங்கனு எனக்கும் தெரியும்... எங்க மக்களுக்கும் தெரியும். ஆனாலும், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு, ஒங்க ஒட்டுமொத்த பேரையும் நாக்கைப் பிடுங்கிக்கற மாதிரி நாலு கேள்வி கேட்டுடலாம்ல... அப்படி கேக்காட்டி, உப்பு போட்டு சோறு திங்குறதுக்கே அர்த்தம் இல்லாம போயிடும்ல... அதுக்குத்தான் ஒட்டுமொத்தமா எல்லாருக்கும் ஒரே கடுதாசி!
கூட்டணி அமைக்கறதுக்காக தினம் பல்லை இளிச்சுக்கிட்டு, டி.வி. கேமராவுக்கு ஸீன் காட்டுறீங்க... டெல்லிக்கும் மெட்ராஸுக்குமா பறக்கறீங்க... இதுலயெல்லாம் காட்டுற அக்கறையில ஒரு துளியையாவது... கொள்கைனு ஒண்ணு இருக்கே... அதுல காட்டினீங்களா?
அதாங்க... கட்சி ஆரம்பிக்கற காலத்துல கொள்கை, குந்தாணினு எது எதையோ எழுதி, ஏட்டுல பதிஞ்சு வெக்கறீங்க. அப்பப்ப பொதுக்குழு, செயற்குழுனு எதையாச்சும் போடுறப்ப, அந்தக் கொள்கையைப் பத்தி தீர்மானம்ங்கிற பேருல எதையாச்சும் உளறிக் கொட்டறீங்க. அந்த விஷயத்தைத்தான் சொன்னேன்!
'விவசாயிகளை வாழ வைப்போம்; நீராதாரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்; வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவர்களைக் காப்போம்; விவசாயிகளின் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதை உறுதிப்படுத்துவோம்'னு வரிசையா ஒவ்வொரு கட்சிக்கும் ஓராயிரம் கொள்கைகளை கூறு கட்டி வெச்சிருக்கீங்க!
நிஜத்துலயே எங்களுக்காகத்தான் நீங்க ஆட்சியைப் பிடிக்க நினைக்கறீங்கனா... அந்தக் கொள்கையில எல்லாம் கவனத்தைச் செலுத்தி, கொள்கைக்கும், குந்தாணிக்கும் எந்த இடைஞ்சலும் இல்லாமத்தானே கூட்டணி போடணும்?
'பால் உற்பத்தி பண்ற விவசாயிங்களுக்கு உரிய விலை கொடு'னு ஊருக்கு ஊர் கூட்டத்துல முழங்கற கம்யூனிஸ்டுங்களே... 'இந்தத் தேர்தல்ல, ஜெயிச்சா, அதை நிறைவேத்துவோம்'னு சொல்ற கட்சியோடத்தானே உங்க கூட்டணி அமையணும்! அப்படி ஏதும் .தி.மு.. அம்மா உங்களுக்கு உறுதிமொழி கொடுத்திருக்காங்களா? 'விவசாயத்தையும், விவசாயத் தொழிலாளர்களையும் காப்பத்தணும்'னு கோஷம் போடுவீங்களே... அதுக்காகவாச்சும் ஏதாச்சும் ஒப்பந்தம் போட்டிருக்கீங்களா?
'மது ஒழிப்புத்தான் எங்களோட முழுமுதற் கொள்கை'னு முழங்கற பா... அய்யாவே... இப்ப ஆட்சியில இருக்கற 'நவீன அய்யன் திருவள்ளுவர்' கருணாநிதிகிட்ட, 'இன்னிக்கே டாஸ்மாக் கடை எல்லாத்தையும் மூடுங்க... அப்பத்தான் கூட்டணி'னு நாட்டு மக்களுக்காக ஏதும் ஒப்பந்தம் போட்டுத்தான் 31 ஸீட்டை வாங்கினீங்களா?
விவசாயிங்களுக்காக தனியா மன்றமெல்லாம் அறிவிச்சு, ஊர் ஊரா கூட்டம் போட்டீங்களே ராமதாஸ் அய்யா! பி.டி. விதைகளை அனுமதிக்கக்கூடாது... வேளாண் மன்றச் சட்டம்கிற கறுப்புச் சட்டத்தை அடியோட வாபஸ் வாங்கணும்னு, அய்யன் கருணாநிதிகிட்ட ஏதும் உத்தரவாதம் வாங்கினீங்களா?
'தமிழ்ல மட்டுமில்ல... உலகத்துல இருக்கற எல்லா பாஷையிலயும் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஊழல். அதை அழிக்குற வரைக்கும் ஓயமாட்டேன். அதுவரைக்கும் மக்களோடவும், கடவுளோடவும் மட்டும்தான் கூட்டணினு சினிமா வசனத்தையே முக்கிமுக்கி பேசிக்கிட்டிருந்த கருப்பு எம்.ஜி.ஆரே... இப்ப முப்பது ஸீட்டுக்கும், நாப்பது ஸீட்டுக்கும் கட்சியை அடகு வெக்கிறதுக்காக நேரம் பாத்துக்கிட்டிருக்கீங்களே... போன தேர்தல் நீங்க முன் வெச்ச கொள்கை கோஷமெல்லாம் மறந்து போச்சா?
.தி.மு.-வா, தி.மு.-வா, காங்கிரசா... இல்லை வேற ஏதாச்சுமானு முடிவு எடுக்க முடியாம, 'பொட்டி'க்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி முழிக்குறீங்களே... வரவர உங்க சினிமா மாதிரியே, உங்க அரசியலும் சலிச்சுப் போச்சுங்க கேப்டன்!
இதைத் தவிர... அல்லு சில்லு அரசியல்வாதிங்க ஏகப்பட்ட பேரு... ஒரு ஸீட்டு, ரெண்டு ஸீட்டுக்காக கொள்கையை மட்டுமில்ல... கட்சியையே அடகு வெச்சுட்டு, கோபாலபுரத்துக்கும், போயஸ் தோட்டத்துக்கும் காவடி தூக்கிக்கிட்டு நிக்கறீங்க. ஒங்கள பார்த்தாலும் பரிதாபமாத்தான் இருக்குது. ம்... வயித்து பொழைப்புக்காக கட்சி நடத்திக்கிட்டிருக்கறவங்க நீங்க. வெந்த புண்ணுல வேல் பாய்ச்சின கணக்கா... இதுக்கு மேல சீண்டிப் பார்க்க நான் ஆசைப்படல... இத்தோட விட்டுடறேன்.
ஆனா, இந்த ஒட்டுமொத்த மொள்ளமாரித்தனம்... கயவாளித்தனம்...னு எல்லாத்துக்கும் அதிபதியா இருக்கற... .தி.மு.., தி.மு.., காங்கிரஸ் கட்சிங்கள அப்படி விட்டுட முடியுமா என்ன?
'மைனாரிட்டி தி.மு.. அரசின் ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதுனு கொடநாட்டுல குந்திகிட்டு அறிக்கை அரசியல் நடத்துற அம்மாவே... நீங்க, அரிச்சந்திரனுங்களை பக்கத்துல ஒக்கார வெச்சுக்கிட்டா 91-ம் வருஷத்துல ஆட்சி நடத்துனீங்க. உலக வரலாற்றுலயே... ஊழலுக்காக தனி நீதிமன்றம் அமைச்சு, தினசரி அங்க வந்து நின்னுகிட்டு, நெஞ்சுவலி டிராமவெல்லாம் போட்டு... சந்தி சிரிச்ச சரித்திரத்துக்கு சொந்தக்கார கட்சியாச்சே உங்களுது! சுடுகாட்டுக் கூரையைக்கூட விட்டு வெக்காம ஊழல் நடத்தி உலகமே உக்காந்து சிரிச்ச வரலாறை மறக்க முடியுங்களா? ஒரேயரு குடும்பத்துக்காகவே ஒட்டுமொத்த ஆட்சியையும் அடகு வெச்ச ஒங்க தியாகம்... மறக்கக்கூடியதா?
இப்ப சுத்தம் சுயம்பிரகாசம் கணக்கா... 'ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக .ராசாவையும், அவரோட தலைவர் கருணாநிதியையும் பிடிச்சு உள்ள போடு'னு கூப்பாடு போடுறீங்க. ஒங்க மேலகூட வருத்தமில்லீங்க... ஒங்ககூட கைகோத்துக்கிட்டு, 'ஊழலை ஒழிக்கப்போறோம்'னு கோஷம் போடுறாங்களே... அவங்கள நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு!
70-கள்ல ஆட்சியில இருந்தப்ப ஊழல் கறையை மேல பூசிக்கிட்டு, சர்க்காரியா கமிஷன் முன்னாடி அம்பலப்பட்டு நின்ன அய்யன் கருணாநிதி, இன்னிக்கு அதைவிட உலக மகா ஊழல்ல சிக்கிக்கிட்ட கட்சியைக் காப்பாத்த வழி தெரியாம அல்லாடுறாரு. காங்கிரஸ் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடறாரு. அம்மாவைவிட பெருங்கொண்ட குடும்பமாச்சே. அத்தனைப் பேரையும் பாக்கணும்னு எதையுமே கண்டுக்காம இருந்தாரு. இன்னிக்கு, ஊரு உலகமே நாறி நசநசக்குது குடும்ப அரசியல் கும்மியடியில!
இதுக்கு நடுவுல, நாங்க துளிகூட கறைபடியாத கதர் சட்டைக்குச் சொந்தக்காரங்கங்கனு சொல்லிக்கிட்டு... அறிவாலயத்துல தி.மு.-வோடயும், அந்தப்புரத்துல .தி.மு.-வோடயும், கொல்லைப்புறத்துல கேப்டன்கூடயும் நூல்விட்டு... மூணு பேரையும் மண்டைக்காய வைக்கற காங்கிரஸோட கொள்கையே... கொள்கைதான்!
ராஜீவ் காந்தி காலத்து போபர்ஸ் ஊழலுக்கே இன்னும் விடை தெரியல. இந்த நிலைமையில... காமன்வெல்த் விளையாட்டுல 80 ஆயிரம் கோடி... கார்கில் போர்ல பாதிக்கப்பட்ட ராணுவக் குடும்பங்களுக்கு வீடு கட்டினதுல ஊழல், ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்ல பங்கு, 2 லட்சம் கோடி இஸ்ரோ ஊழல்னு ஒவ்வொண்ணா பொங்கி வெளியில வருது.
இந்த லட்சணத்துல, தான் என்னமோ யோக்கிய சிகாமணிங்கற கணக்கா... 'கூட்டணி அரசுங்கறப்ப, மற்ற கட்சிகளோட நிபந்தனைகளுக்கெல்லாம் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுது. அதை ஏத்துக்கிட்டுதான் ஆகணும்'னு பேட்டி கொடுக்கறாரு பிரதமரு. யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ள வைனு சொல்றதைத் தவிர வேற என்ன சொல்ல!
அய்யா புண்ணியவான்களே... ஊரு பூரா நிலத்தைக் கூறு போட்டு, விளைநிலத்தை வீணடிக்கறீங்க... நூறு நாள் வேலைனு சொல்லி விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்கவிடாம அதையும் கெடுக்கறீங்க... டாஸ்மாக் கடையை தொறந்து வெச்சி, அடுத்தத் தலைமுறையை அழிக்கறீங்க... இலவசங்களை அள்ளிக் கொடுத்து சோம்பேறித் தலைமுறையை வளர்க்கறீங்க!
ஆகக்கூடி, கிட்டத்தட்ட இந்தியாவுக்கு சமாதி கட்டி, சங்கு ஊதிட்டீங்க. மிச்ச,சொச்சம் இருக்கறது எலும்புக்கூடுகளா திரியற இத்துப்போன என்னை மாதிரி கோவணாண்டிங்கதான். எங்ககிட்ட இருக்கறது ஒட்டுக்கோவணம் மட்டும்தான்.
அய்யா சாமீகளா... நாங்க ஒங்கள மாதிரியெல்லாம் பட்டுத்துணிக்கு கனவு காணலீங்க. இருக்கற ஒட்டுக்கோவணத்தைக் காப்பாத்திக்கத்தான் படாதபாடு படறோம். அதையும் உருவிப்புடாதீங்க!
இப்படிக்கு,
கோவணாண்டி.

No comments:

Post a Comment