Thursday, 10 February 2011

'சீனாதானா'வே, சீனாவைப் பாருங்க...வேண்டாதத பேசி, வீணாப் போகாதீங்க!'


   25-பிப்ரவரி -2011

உள்துறை அமைச்சருக்கு கோவணாண்டி எச்சரிக்கை !

கோவணாண்டி முறையீடு 

பணத்துறைக்கு மந்திரியா இருந்தப்ப, பல விவசாயிகளைப் பரலோகம் அனுப்பி வெச்சுட்டு, இப்ப உலக மகா ஊழல் பாதுகாப்பு அரசுக்கு உள்துறை மந்திரியா இருக்கற, செட்டிநாட்டு சீமான், சீனாதானாவுக்கு (. சிதம்பரம்), வணக்கம் சொல்லிக்கிறான் இந்தக் கோவணாண்டி!
ஊழல்ல ஊறிப்போன ஒருத்தரையே, ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்குத் தலைவரா உக்கார வெச்சு புரட்சி செஞ்சிருக்கு உங்க அரசாங்கம். உங்க புரட்சியை அத்தோட விட்டிருந்தா... நானும் பேசாம மண்ணைக் கிளறிகிட்டு கிடந்திருப்பேன். ஆனா, சம்பந்தமேயில்லாம, விவசாயத்தைப் பத்தியும் விவசாயிகளைப் பத்தியும் துளிகூட பொறுப்பில்லாம பேசினதைத்தான் என்னால தாங்கிக்க முடியல... சட்டுனு பொங்க ஆரம்பிச்சுடுச்சுல்ல கோவம்!

நல்லவேளை... நீங்க உள்துறை மந்திரி. இதுவே உணவுத் துறை மந்திரியா இருந்திருந்தா, இந்நேரம், 'விவசாயமே இல்லாத நாடு இந்தியா'னு மாத்திக்காட்டி சரித்திர சாதனை படைச்சிருப்பீங்க. ஐயா... நீங்க, அதுக்கு முன்ன உங்க குரு பொருளாதாரப் புலி மன்மோகன் சிங் எல்லாம் நிதி மந்திரியா இருந்த காலத்துல உருவாக்கின பொல்லாத பொருளாதாரக் கொள்கைதான்... இன்னிக்கு ரெண்டு லட்சம் விவசாயிங்க வரை தற்கொலை பண்ணிக்கிட்டு செத்ததுக்கு காரணம்னு ஊரே பேசிக்கிட்டிருக்குஇன்னும்கூட அந்தக் கொடுமை தொடர்ந்துகிட்டே இருக்கு!அதைத் தடுத்து நிறுத்தத் துப்பில்லாட்டியும், 'சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் பிள்ளையார் கோயில் ஆண்டிங்கிற கதையா, '4 சதவிகிதத்துக்கு மேல விவசாயம் வளராது. அதனால 11 சதவிகிதம் வளர்ச்சியில் உள்ள சேவைத் துறை, 10 சதவிகிதம் வளர்ச்சி உள்ள தொழில்துறை பக்கம் விவசாயத் தொழிலாளர்களைத் திருப்பி விடணும்'னு பொளந்து கட்டியிருக்கீங்களே... இது உங்களுக்கே நல்லாயிருக்கா?!
அய்யா, மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்க, கேக்காமலே குறைஞ்ச வட்டியில கடன்,99 வருஷ குத்தகையில இடம், மானிய விலையில மின்சாரம்னு தொழில்துறைக்கு அள்ளி, அள்ளி கொடுக்கறீங்க. ஆனா, விவசாயத்துக்கு என்ன செஞ்சீங்க.? அப்புறம் எப்படி விவசாயம்
4 சதவிகிதத்துக்கு மேல வளரும்.பழையகஞ்சி குடிக்குற குழந்தைக்கும், கப்பு கப்பா காம்ப்ளான் குடிக்குற குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கா... இல்லையா? நீங்க வெண்ணெய் கொடுத்த குழந்தை கொழுத்திடுச்சு. சுண்ணாம்பு கொடுத்த குழந்தை சுணங்கிடுச்சு. அந்தக் குழந்தையைத் தேத்துறதுக்கு பதிலா, கொழுத்தக் குழந்தைக்குத்தான் கூடுதலா ஊட்டணும்னு சொல்றீங்களே இது எந்த ஊரு நியாயம்.?
உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. ஏற்கெனவே, 'நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்'னு ஒரு சாதனை (!) திட்டத்தைப் போட்டு, விவசாயத் தொழிலாளர்கள விவசாயத்துல இருந்து வெளியேத்திட்டீங்க. இதனால வெறுத்துப் போன விவசாயிகள்ல பாதி பேரு நெல்லு நட்ட வயலுல, கல்லு நட ஆரம்பிச்சுட்டாங்க... கத்திரிக்காய் நட்ட இடத்துல கட்டடம் முளைக்க வெச்சுக்கிட்டிருக்காங்க... மஞ்சள் விளைஞ்ச நிலத்துல மரத்தை நட்டுட்டாங்க!
உங்க ஆட்சியோட உச்சக்கட்ட சாதனையா... உணவு உற்பத்தி ஒரே இடத்துல ஆணியடிச்ச கணக்கா உக்கார்ந்து போச்சு. இதையும் மீறி எங்கள மாதிரி சில விவசாயிக, புலிவாலைப் புடிச்ச கதையா, விவசாயத்தை விடமுடியாம செஞ்சுகிட்டு இருக்கோம். இளந்தாரி பசங்க யாரும் விவசாயத்துக்கு வர்றதில்லை. இப்ப அதுக்கும் ஆப்பு வெக்குற மாதிரி, நூறு நாள் வேலை திட்டத்துல கூலியை 130 ரூபாயா உசத்தி, குத்துயிரும், குலை உயிருமா இருக்குற விவசாயத்தை ஒட்டுமொத்தமா சாகடிக்கத் தொடங்கிட்டீங்க.
'விவசாயத் துறை வளராதுனு நீங்க சொல்றீங்க. ஆனா, அரசாங்கம் விவசாயத்தை இயந்திரமயம், நவீனமயம், தொழில்மயமாக்கணும்னு வீதிக்கு வீதி விளம்பரம் செஞ்சுகிட்டு இருக்கு. நீங்க சொல்றதுதான் உண்மைனா... ஒருவேளை இயந்திரம் செய்ற கம்பெனிங்ககிட்ட உங்க கலப்பட கதர் வேட்டிங்க கமிஷன் எதுவும் வாங்கி குவிச்சு வெச்சுருக்குதுங்களோ?!
கமிஷன் வாங்கறதுக்காகவே... டிராக்டர் வாங்குங்கனு கயவாளித்தனமான யோசனையை எங்களுக்குச் சொல்றாங்களோ? அறுவடைக்கு, நடவுக்கு, பால் கறக்க, சாணி அள்ளறது எல்லாத்துக்கும் மிஷினை வாங்கச் சொல்லி பிரசாரம் பண்றாங்களோ?
இப்படிப்பட்டவங்க பேச்சையெல்லாம் கேட்டுக் கேட்டுத்தானே... பொண்டாட்டித் தாலியைகூட அடகு வெச்சு கடன வாங்கி, அந்தக் காசையெல்லாம் கழனியில போட்டுட்டு, கடைசியில எங்காளுங்க பலரும் தூக்குல தொங்கிட்டானுங்க. மிச்ச மீதி இருக்கறவங்கள நீங்க தூக்குக் கயிறோட துரத்த ஆரம்பிச்சுட்டீங்க. இதுக்குப் பிறகும் எப்படி வளரும் விவசாயம்?
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? அடுத்த 5 வருஷத்துல கடுமையான உணவுப் பஞ்சம் வரப்போகுதுனு தெரிஞ்சுகிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையா, 'இனிமே நாட்டுல உணவுப் பயிர்களை மட்டும்தான் விளைய வெக்கணும், பணப்பயிரை போடக்கூடாதுனு சட்டம் போட்டிருக்குதாம் சீனா. இப்படி தொலைநோக்கோட திட்டம் போடுறதாலதான், சீனாவைப் பாத்து ஆனானப்பட்ட அமெரிக்காவே நடுங்கிக்கிட்டிருக்கு. நீங்க என்னடானா... ஊழலுக்குப் பாதுகாப்பாவும், உழவனுக்கு எதிராகவும் பேசிக்கிட்டே இருக்கீங்க.
இப்பவே, 'விலைவாசி விண்ணைத் தொடுதுனு ஆளாளுக்கு குதிக்குறாங்க. இந்த லட்சணத்துல உங்க யோசனையக் கேட்டு, இருக்கிற விவசாயிகளையும் வெளியேத்திட்டா... அப்புறம் மண்ணும், மண்ணாங்கட்டியும்தான் மிஞ்சும் நீங்களும் நானும் சாப்பிடறதுக்கு... ஜாக்கிரதை!

இப்படிக்கு
கோவணாண்டி

No comments:

Post a Comment