
தேர்தல் நெருங்கி விட்டால் பகுத்தறிவு கொள்கைகளையும் ஓரமாக வைத்து விடுவார்கள் போலும். இந்த ஆண்டு மு.க. அழகிரியின் பிறந் தநாள் விழா கிட்டத்தட்ட கோயில்களிலேயே கொண்டாடப்பட்டது.
“பிறந்த நாளன்று ஊரில் இல்லாததால் என்னை சந்திக்க நேரில் வர வேண்டாம்’’ என கட்சியினருக்கு அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது பிறந்தநாளுக்கு முதல்நாளே துணை முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்து அழகிரியை வாழ்த்திச் சென்றார்.
அன்று மாலை அழகிரியை அமைச்சர் பூங்கோதை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது, ‘உங்களைப் பற்றி தவறாக எதுவும் பேசல’ என்று பூங்கோதை சொல்ல, ‘அதுபற்றி நான் எதுவும் நினைக்கல’ என்று சொல்லியிருக்கிறார் அழகிரி!
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர்... என பெரிய இடங்களில் இருந்து வாழ்த்துகள் வர மகிழ்ந்து போனாராம் அழகிரி. எப்போதும்போல் நாளிதழ்களில் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் களைகட்டின. ராஜாமுத்தையா மன்றத்தில் நடைபெற்ற விழாவில் அழகிரிக்குப் பதிலாக, அமைச்சர் பெரியகருப்பன் கேக் வெட்டினார்.
வழக்கம்போல் ஏழைகளுக்கு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவு இதெல்லாம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, எந்த ஆண்டும் இ ல்லாத அளவுக்கு கோயில்களில் பிரார்த்தனைகளும், அன்னதானமும் செய்து கலக்கி விட்டார்கள் தி.மு.க.வினர்.
மதுரையை அடுத்த அழகர்கோயிலில் காந்தி அழகிரி பசுக்களை தானமாக வழங்கினார். அதையடுத்து, அழகிரிக்கு சென்டிமெண்டான ஒத் தக்கடை யோக நரசிம்மர் கோயிலில் ஆறாயிரம் பேருக்கு விருந்து வழங்கப்பட்டது. காந்தி அழகிரியே நேரடியாக இங்கு வந்து உணவு பரிமாறினார். இந்தக் கோயில் முன்பாக இருந்துதான் கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை அழகிரி தொடங்கினார். வெற்றி பெற்ற பிறகு நன்றி அறிவிப்பையும் இங்கிருந்து தான் தொடங்கினார்.
அதுபோல மதுரையிலுள்ள கூடலழகர் பெருமாள் கோயில், மதனகோபாலசுவாமி கோயில், மீனாட்சி அம்மன் கோயில், நலம்புரி விநாயகர் கோயில் என மதுரையில் ஒரு கோயில் விடாமல் அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்தனர்.
வழக்கமாக ஜெயலிலதா பிறந்தநாளுக்குத்தான் கோயில்களில் பிரார்த்தனை, அன்னதானம், தங்கத்தேர் இழுத்தல் என அ.தி.மு.க.வினர் அமர்க்களப்படுத்துவார்கள். இந்த முறை முதல்முறையாக தி.மு.க.வினர் இப்படி இறங்கியதை, ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் பிற கட்சியினர்.
மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அழகிரி பிறந்தநாளை சாக்காக வைத்து தேர்தல் வேலையையும் தி.மு.க.வினர் தொடங்கி விட்டனர். நூறு வாக்காளர்களுக்கு மூன்று பேர் என நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் சரியாக கவனிக்கப்பட்டனர். தி.மு.க. தொண்டர்களுக்கும் அதிர்ஷ்டம் அடித்ததாம்.
பிறந்த நாளை சாக்காக வைத்து அழகிரியை சந்தித்து சீட்டிற்குத் துண்டு போடலாம் என நினைத்த பலரது ஆசை அம்பேல் ஆனது. கட்சி நிர்வாகிகள் சிலர் நாளிதழ்களில் அழகிரிக்குப் பிறந்நநாள் வாழ்த்து விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். அதில் ஸ்டாலின் படம் இடம் பெற்றி ருக்கவில்லை.
“தனி நபர்களோ, கட்சியின் தொண்டனோ துணை முதல்வர் படம் இல்லாமல் விளம்பரம் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளலாம். நிர்வாகிகள் கொடுத்தால் எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்.?’’ என பொங்கிய(?) தி.மு.க.வினர் சிலர், துணை முதல்வர் ஸ்டாலின் படம் இல்லாமல் விளம்பரம் கொடுத்தவர்கள் லிஸ்டை பேப்பர் கட்டிங்கோடு ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார்களாம்.
கடவுள் மறுப்பெல்லாம் மத்தவங்களுக்குத்தான் சொந்தக் கட்சிக்காரங்களுக்குக் கிடையாது போல என்ற கிண்டலையும், பிறந்தநாளை வைச்சு மறுபடியும் ஸ்டாலின், அழகிரிக்குள்ள பிரச்னை வராமல் இருந்தா சரிதான் என்று தி.மு.க. தொண்டர்கள் புலம்பவும் காரணமாய் அமைந்திருந் தது இந்த பிறந்தநாள்.
படங்கள்: விக்கி
ப. திருமலை
No comments:
Post a Comment