Monday, 7 February 2011

ஸ்பெக்ட்ரம் சர்வதேசத் தொடர்புகள்


 வெளியே தெரியவரும் முகங்கள்!
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசுக்கு

ஏற்பட்ட இழப்பில், ஆண்டிமுத்து ராசாவால் பயனடைந்த நிறுவனங்களில் ஒன்று... ஸ்வான் டெலிகாம் நிறுவனம். இந்த நிறுவனச் செயல்பாடுகளால், பாகிஸ்தான், சீனா மற்றும் மாஃபியா தலைவன் தாவூத் இப்ராஹிம் போன்றோரிடம் இருந்து நாட்டின் பாதுகாப்புக்கு பல முனைகளில் இருந்தும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.  இந்தியாவுக்கு ஏற்பட்ட  1.76 லட்சம் கோடி இழப்பு என்பது மட்டுமே தற்போதைய கேள்வி அல்ல. இந்திய நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமை ஆகியவைதான் முக்கியமான கேள்வி. இதில் விசித்திரம் என்னவென்றால், மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு இவை அனைத்தும் ஆரம்பம் முதலேதெரியும். இது குறித்து பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்புகளைத் தெரிவித்தபோதும், ஆ.ராசாவின் கீழ் இருந்த தொலைத் தொடர்புத்துறை அனைத்துக்கும் ஒப்புதல் அளித்தது!
 இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர மௌனத்தைக் கடைப்பிடித்து வந்தது ஏன்? யாருடைய உத்தரவின் பேரில் இந்த அமைதி? 'தொலைத் தொடர்பு அலைக்கற்றை என்பது மதிப்புமிக்க அரிதான வளம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், பகைமை நாடுகளின் கைகளில் இந்த வளம் சென்றடையக் கூடாது!’ என்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. கடந்த நான்கு பகுதிகளில் நாம் எழுதியிருக்கும் செய்திகளின் சாராம்சமும் இதுதான்! இந்த அடிப்படையில், 'அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு மையம் என்ற அமைப்பு சார்பில் புதிதாக ஒருவழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணை கடந்த 1-ம் தேதி அன்று டெல்லியில் நடந்தது. நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
''அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களிடம் இருந்து அந்த உரிமங்களைப் பறிக்காத வரை, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கின்றன. அவை இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துபவை!'' என்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும், சுப்பிரமணியன் சுவாமியும் சொல்லி இருக்கிறார்கள். அப்போது நீதிபதிகள், இந்நிறுவனங்கள் பற்றி கூடுதலான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யச் சொல்லிக் கேட்டனர். அதன்படி, மார்ச் 1-ம் தேதி அனைத்து நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயர்களையும் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்காகத் திரட்டி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட முக்கியமான நபர்களின் புகைப்படங்கள் இந்தப் பக்கங்களில்​பிரசுரம் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி வரும் டெல்லிப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார். ''2ஜி அலைக்கற்றை லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களில் மிக முக்கியமானது ஸ்வான். ரிலையன்ஸ் மற்றும் டைகர் டிரேடர்ஸ் ஆகிய நிறுவனங்களால் ஊக்குவிக்கப்​பட்டதே இந்த ஸ்வான். இந்த நிறுவனத்தை இவர்கள் ஆரம்பித்துவிட்டு, அதன் பிறகு பல்வா குரூப்புக்கு விற்பனை செய்துவிட்டார்கள். அவர்கள், டிபி ரியா​லிட்டி என்று தங்களுக்கு புதிய பெயரைச் சூட்டிக்கொண்டார்கள்.
  இந்த நிறுவனம் தன்னுடைய 45 சதவிகிதப் பங்குகளை துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எட்டிஸாலட் என்ற நிறுவனத்துக்கு விற்றது. 5.27 சதவிகிதப் பங்குகளை தமிழகத்தைச் சேர்ந்த ஜெனெக்ஸ் எக்ஸிம் என்ற நிறுவனத்துக்கு விற்றார்கள். இப்போது எட்டிஸாலட்  என்ற நிறுவனம், டிபி டெலிகாம் என்ற பெயரில் இயங்குகிறது. வில்லங்கமே எட்டிஸாலட் என்ற நிறுவனத்தில் இருந்துதான் தொடங்குகிறது...'' என்ற பீடிகையுடன் அவர் ஆரம்பித்தார்.
  ''பாகிஸ்தான் நாட்டின் டெலி கம்யூனிகேஷன் துறையை பி.டி.சி.எல். என்பார்கள். இதன் மிக முக்கியமான பொறுப்பில் 10 பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஐந்து பேர்கள் எட்டிஸாலட் நிறுவனத்திலும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதாவது ''2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற எட்டிஸாலட்  நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கும் பாகிஸ்தான் நாட்டுக்கும் எந்த விதமான வேறுபாடும் இல்லை. இரண்டும் ஒன்றே!'' என்று சொல்லும் அளவுக்கு நெருக்கமானவர்கள். அப்துல் ரஹ்மான் அப்துல்லா அப்துர் ஹிப்ராஹிம் அலி நுரானி (சேர்மன் மற்றும் சீஃப் எக்ஸிகியூட்டிவ் ஆபீஸர்), அப்துல்லாஹ் அகமது சலி அஹமது அலி சாவ்லே (சீப் ஹியூமன் ரிசோர்ஸ் ஆபீஸர்), ஃபாஹில் முகமது எர்ஹமா அலி அன்சாரி (எக்ஸிகியூட்டிவ் வைஸ் பிரசிடென்ட் இன்ஜினீயரிங்), அப்துல்லாஹ் அகமத் ஓமர் தார்யம் (ஜெனரல் மேனேஜர்- நார்தன் எமிரேட்ஸ்), அகமத் அலி ஜார்வான் (ஜெனரல் மேனேஜர், ரியல் எஸ்டேட்) ஆகிய ஐவர்தான் எட்டிஸாலட்  பொறுப்பிலும், பாகிஸ்தான் டெலி கம்யூனிகேஷனிலும் இருக்கிறார்கள். இதை ஒப்புக்கொண்டு பி.டி.சி.எல். தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் இவர்களது பெயர்களையும் இணைத்தே வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டுக்குத் தொலைத் தொடர்பு உரிமங்கள் தரப்பட்டுள்ளன என்பதற்கு இதைவிட ஆதாரங்கள் தேவை இல்லை. அப்படித் தருவதாக இந்திய அரசாங்கத்தின் முடிவுக்கு, ஃபாரின் இன்ஃபர்மேஷன் புரமோஷன் போர்டு என்று சொல்லப்படும் எஃ.ஐ.பி.பி. எதிர்ப்புத் தெரிவித்ததா அல்லது ஆதரவு தெரிவித்​ததா என்ற கேள்வி முக்கியமானது. ஏனென்றால், இந்த அமைப்புக்குள் பிரதமர், நிதி அமைச்சர், ராணுவ அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு முக்கிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்படி அனுமதித்தார்கள்... யார் அவர்கள் கை​களைக் கட்டிப்போட்டது போன்ற ரகசியங்கள் கோர்ட் மூலமாக வெளியில் வரத்தான் போகிறது...'' என்று பீதியைக் கிளப்புகிறார் அவர்.
ஸ்வான் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய பால்வா குரூப் பற்றி நாம் ஏற்கெனவே எழுதி இருக்கிறோம். இதன் சேர்மன் வினோத் கே.கோயங்கா. நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருப்பவர் சாஹித் யூ.பால்வா. இவர் மீது இந்திய உள்துறை அமைச்சகம் ஒரு கறுப்புக் கடிதத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால் அனுப்பியதாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனத்தில் துணைத் தலைவராக தாவூத் இப்ராஹிமை இணைத்துப் பேசிய கதையும் உண்டு. இந்த நிறுவனமும் எட்டிஸாலட்டும் இணைந்துதான் எட்டிஸாலட்  டிபி டெலிகாம் என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் முகமது உசேன் ஓம்ரான், அஹமத் பின் அலி, கலிபா அல் போராஹ், நசீர் பின் ஓபூத் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்கள் தவிர தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் இதன் உறுப்பினராக இருக்கிறார்.
அந்தத் தமிழகப் பிரமுகரின் ஆதி அந்தங்கள் அனைத்தையும் இப்போதுதான் நாங்கள் முழுமையாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த தொழிலதிபரின் முக்கியமான வர்த்தகத் தொடர்புகள் தமிழகத்தில் காலூன்றி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைய ஆட்சி மேலிடத்துக்கு மிகமிக நெருக்கமான நபராகவும் இருக்கிறார். அதை வைத்துத்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்த நிறுவனம் வாங்கியிருக்குமோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரும்போதுதான் பணப் பரிவர்த்தனைகளின் அளவு வெளிச்சத்துக்கு வரும்...'' என்ற சஸ்பென்ஸுடன் முடித்தார் அந்த டெல்லி பிரமுகர்!

No comments:

Post a Comment