Saturday, 29 January 2011

பசிக்காத வயிறைக் கண்டுபிடிங்க



சென்னைக்குப் பக்கத்துல இருக்கற காட்டாங்கொளத்தூர்ல நடந்த 98-வது அகில இந்திய அறிவியல் மாநாட்டுல கலந்துக்கிட்ட நீங்க, 'வெளிநாட்டுல இருக்கற இந்திய விஞ்ஞானிங்க வீட்டுக்குத் திரும்பணும்... தாய்நாட்டுக்கு சேவை செய்யணும்'னு 'எந்திரன்' படத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கணக்கா வசனம் பேசி கைத்தட்டல் வாங்கியிருக்கீங்கள்ல... அந்த விஷயம் தொடர்பாதாங்க ஒங்க கூட இப்ப கணக்குவழக்கு தீர்க்க வேண்டியிருக்கு.
ஆமாம்... நீங்கள்லாம் அந்த விஞ்ஞானிககிட்ட இன்னும் அப்படி என்னத்ததான் எதிர்பார்க்கறீங்க? நீங்க கூடத்தான் ஒரு காலத்துல உலகம் போற்றும் பொருளாதாரப் புலி. தாய்நாட்டுக்குச் சேவை செய்றதுக்காக உலக வங்கி வேலையகூட துச்சமா மதிச்சு தூக்கி எறிஞ்ச ஆளு. ஆனா இப்ப என்ன சேவை செய்துகிட்டிருக்கீங்க? ஊழல் பெருச்சாளிகளைத்தானே அடைகாக்கறீங்க. விளையாட்டுல கொள்ளை, வீடுகட்டுனது கொள்ளை, 2ஜி அலைகற்றையில கொள்ளையினு எல்லா கொள்ளைக்காரங்களுக்கும் தலைமை தாங்கி சேவை செய்றீங்க அவ்வளவுதானே? இந்த லட்சணத்துல விஞ்ஞானிகளுக்கு வேற அழைப்பு விடுக்கறீங்க.
இன்னிக்கு நண்டு, சிண்டுங்க கையிலகூட செல்போன் நிண்டுது. எல்லாம் விஞ்ஞானிகளோட கைங்கர்யம்தான். இது மனுஷங்களோட நேர விரயத்தை தடுக்குது. அவனுக்கு பல வகையிலயும் உதவியா இருக்கு. வாஸ்தவம்தான. ஆனா, அதுக்காக ஊருக்கு ஊரு போட்டிருக்கீங்களே செல்போன் டவர்.... அதுல இருந்து வெளிவர்ற மின்காந்த அலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாம சிட்டுக்குருவி இனமே அழிஞ்சுப் போயிக்கிட்டிருக்குதே... இதுக்கு என்ன பண்ண போறீங்க?
ஒங்களோட வியாபாரத்துக்கு உதவியா இருக்கற விஞ்ஞானிக சொன்னா கேட்டுக்குவீங்க. அதையெல்லாம் அடுத்த நிமிஷமே அடிச்சுப் பிடிச்சு, முதல்ல வந்தவங்களுக்கு முன்னுரிமைனு பெருமாள்கோயில் புளியோதரை கணக்கா வாரி வழங்குவீங்க. ஆனா, இந்த மனுஷ, மக்களெல்லாம் ரொம்ப நாளைக்கு வாழணும்கறதுக்காக அக்கறையோட பேசற விஞ்ஞானிங்க சொன்னா, காது கொடுத்துக்கூட கேட்க மாட்டீங்க.
தெரியாமத்தான் கேக்குறேன்... இன்னும் எதைத்தான் இந்த விஞ்ஞானிக கண்டுபிடிக்கணும்னு எதிர்பார்க்கறீங்க? ஃபோபர்ஸ், காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம்னு லட்ச லட்சமா ஊழல் பண்ணாலும், யாராலயும் கண்டுபிடிக்காம இருக்கறதுக்கு ஏதாச்சும் முகமூடி தயாரிச்சுக் கொடுக்கப் போறாங்களா? அப்படியே வெளியில தெரிஞ்சு, அதைப் பத்தி யாராச்சும் பேசினா அவங்க வாயெல்லாம் டப் டப்னு ஒட்டிக்கற மாதிரி எதுவும் ஏற்பாடு பண்ணப் போறாங்களா?
மனுஷங்களுக்கு மட்டும் என்ன வாழுதாம். 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’கிற கதையா... ஒரு காலத்துல ஆஜானுபாகுவா, ஆரோக்கியமா, 60 வயசுலயும் ஆடிப்பாடிக்கிட்டு இருந்த மனுஷங்க... இன்னிக்கு 30 வயசுலயே முழங்காலை பிடிச்சுகிட்டு முனங்குறாங்க. ஒவ்வொரு மாசமும் சாப்பாட்டுக்காக செய்ற செலவைவிட, ரெண்டு மடங்கு... மூணு மடங்குனு மருந்து, மாத்திரைகளுக்கு செலவு செய்றாங்க. கம்பங்கூழும்... ராகி களியுமா தின்னுட்டு, காத்தாட வாழ்க்கையை ரசிச்சு ருசிச்சிக்கிட்டிருந்தவனுங்க... பீட்சாவை தின்னுட்டு, கண்டதையும் குடிச்சுட்டு சினைப்பன்னி கணக்கா உடம்பு பெருத்து, புதுவித வியாதியில சிக்கித் தவிக்கறாங்க.
நாட்டோட முதுகெலும்பான விவசாயத்தை ஏற்கெனவே அழிவுப் பாதைக்குக் கொண்டு போனது போதாதுனு, பி.டி. விதைனு புதுசா குண்டு போட்டு, பாரம்பர்யமா நாம வெச்சிருந்த விதைகளையெல்லாம் காலி பண்ற வியாபாரத்துல இறங்கியிருக்கறதும் விஞ்ஞானிங்கதான். உணவுப் பொருளுங்களையெல்லாம் உருமாத்தி, அதுங்களுக்கு வேட்டு வைக்கறதும் அவங்கதான்.
இத்தனை நாளா, ராக்கெட், ராக்கெட்டா மேல விட்டுக்கிட்டிருந்த அமெரிக்கா, இன்னிக்கு அதல பாதாளத்த நோக்கி போயிக்கிட்டிருக்கிறது எங்களுக்கும் தெரியும். எங்கூரு இங்கிலிபீஸு வாத்தியாரு, கக்கத்துல ஏ.பி.சி.டி. பேப்பரை சொருகிக்கிட்டு, தினம்தோறும் அமெரிக்கா கவுந்துகிட்டிருக்கற கதைகளைத்தானே எடுத்துவிட்டுக்கிட்டு இருக்காரு ஊருக்குள்ள!
அய்யா சாமீ? இதுவரைக்கும் நாம புடுங்கினதெல்லாமே தேவையில்லாத ஆணிங்கதான். இதுக்குப் பிறகும், அதைப் புடுங்கறேன்... இதைப் புடுங்கறேன்னு கிளம்பாம... 'போதும் இதோட நிறுத்திக்குவோம்'னு கை கைட்டிக்கற வழிய பாருங்க. முடிஞ்சா...  வறுமை, ஊழல், ஏற்றத் தாழ்வு இல்லாத உலகத்தை கண்டுபிடிக்க  முடியுமானு அந்த விஞ்ஞானிகளை ஆராய்ச்சி பண்ணச் சொல்லுங்க. அதை விட்டுட்டு இனியும் இயற்கையை இம்சை செஞ்சுக்கிட்டு, காத்தை கரியாக்கிகிட்டு, விவசாயத்தை விஷமாக்கிக்கிட்டே இருந்தா... கூண்டோட கைலாசம் நிச்சயம்!

No comments:

Post a Comment