Sunday, 30 January 2011

இந்தியா: பழங்குடிகளுக்கு பாரபட்சம்... கம்பெனிகளுக்கு கருணை!

.திருமாவேலன் ( 24/12/2010)


'30 நாட்களில் இந்தி பாஷை' என்பதைப்போல சாதாரணமானது அல்ல உள்துறை அமைச்சர் .சிதம்பரம் செய்துள்ள அறிவிப்பு. 'மூன்று ஆண்டுகளில் மாவோயிஸ்ட்டுகள் ஒழிக்கப்படுவார்கள்' என்பது அவரது ஆசை. இந்தியாவில் எரியும் பிரச்னையை எதிர் கொள்ள .சி. பயன்படுத்தி வரும் கற்பனைக் குதிரையை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஆறு மாநிலங்கள், 65 மாவட்டங்கள் எனத் தனது எல்லைகளை விரித்துவைத்து இருக்கும் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க 'மூன்று ஆண்டுகளே போதும்' என்று அமைச்சர் அறிவித்த மூன்று நாட்களுக்குள் நடந்த நிகழ்வுகளை துணை ராணுவத்தாலும் காவல் துறையாலும் தடுக்க முடியவில்லை. நாளுக்கு நாள் இந்த சம்பவங்கள் அதிகரிக்கவே செய்யும். அப்படியானால் .சி-யின் கனவு? மாவோயிஸ்ட்டுகளை எதிர்கொள்ள மூன்று காரியங்களை மத்திய அரசாங்கம் உடனடியாகச் செய்தாக வேண்டும்.


காட்டுக்குள் இருந்து வெளியேறுங்கள்!

சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் 60 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் எல்லைப் பகுதிதான் இன்று எரிந்துகொண்டு இருக்கிறது. 'பசுமை வேட்டை' என்கிறது மத்திய அரசு. 'இது மக்கள் வேட்டை' என்கிறார்கள் மனித உரிமையாளர்கள். இந்தப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்ட மத்தியப் படைகளின் முழுமையான எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை. ஆனால், 50 ஆயிரத்துக்கும்மேற் பட்ட துணை ராணுவப் படையினர், சி.ஆர்.பி.எஃப். வீரர்கள், பி.எஸ்.எஃப். படையினர் இந்த எல்லைக்குள் உள்ளார்கள்.நாகா பட்டாலியன் உள்ளே சென்று உள்ளது. வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் எனப் பெயரிடப்பட்ட பல்வேறு படைகள் உள்ளன. மேலும், 'முள்ளை முள்ளால் எடுக்கும்' நடவடிக்கை யாக அரசால் உருவாக்கப்பட்ட பழங்குடி மக்களைக்கொண்ட படைப்பிரிவான 'சல்வாஜுடும்' என்ற அமைப்பினரும் அலைகிறார்கள். இவை அனைத்தையும் கூட்டிப் பார்த்தால் இரண்டு லட்சம் எண்ணிக்கையைத் தொடலாம். எனவேதான் 'இந்தக் காடுகளில் நடப்பது உள்நாட்டுப் போர்' என்கிறார் எழுத்தாளர் அருந்ததி ராய். இரும்புத் துப்பாக்கிகளுக்கு எதிராக கம்பு, கட்டை, வில்லைத் தூக்கிப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள். பயிற்சி பெறும் இவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புரட்சியாளர்கள் இல்லை. ஒரு கிராமத்தை எடுத்துக்கொண்டால், உடல் வலிமை உள்ள அனைவருமே கையில்கிடைக் கும் ஒரு கருவியை எடுத்துக்கொண்டு நிற்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளை இப்போது மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைவிட அரசின் இந்தப் படை அச்சுறுத்தலை எதிர்க்கிறார்கள் என்பதே உணர வேண்டிய சேதி. 


'மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டாம். வன்முறையைக் கைவிட்டால் போதும்' என்கிறார் .சிதம்பரம். மாவோயிஸ்ட்டுகள், பழங்குடியினருக்கு எதிராக வெடிக்கக் காத்திருக்கும் துப்பாகிகளுக்குப் பின் நின்று இதைச் சொல்வதுதான் தவறு. எனவே, காட்டுக்குள் இருக்கும் படைகளைத் திரும்பப் பெற்று, அதன் பிறகு மாவோயிஸ்ட்டுகள், பழங்குடி மக்கள் குழுக்களை நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு அழைப்பதன் மூலமான முதல் படியை அரசு செய்தாக வேண்டும். 10 பேர் சேர்ந்து இரண்டு அரசு அதிகாரிகளைக் கடத்திப் போய், மூன்று தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லும் - பயங்கரவாத சம்பவங்கள் அல்ல இந்த ஆறு மாநிலங்களில் நடப்பவை. ஊரே சேர்ந்து நிற்கிறது - ஒரு மாவட்டத்துக்குள் போலீஸை வரவிடாமல் தடுக்கக் குறைந்தது 30 ஆயிரம் பேர் வேண்டும் - பந்த் என்று அறிவித்தால், ஐந்து 
மாநிலமும் அமைதி ஆகிறது. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேட்டை நடத்த முடியாது. அவர்களது விருப்பங்களை அறிய மத்திய அரசு இறங்கி வர வேண்டும்.

ஒப்பந்தங்களை முறியுங்கள்! 


இந்தச் சண்டை நடந்துகொண்டு இருக்கும் இடம் பொட்டல் காடுகள் அல்ல. பொலிவும், 
வளமும், செழிப்புமான கனிம வளங்கள் நிறைந்த பகுதிகள். சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, ஜார்கண்ட் மாநிலங்கள் உள்ளடங்கிய தண்டகாரண்ய வனப் பகுதியைப் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கழுகுக் கண்களால் வட்டமிட்டுக்கொண்டு இருக்கின்றன. நிலக்கரி, அலுமினியம், பாக்சைட், மாங்கனீஷ், சிலிகான், குவார்ட்ஸ், புளோரைட், கிரானைட் மற்றும் இரும்புத் தாதுக்கள் நிறைந்த பகுதி இவை. இந்தியாவில் அதிக அளவு இரும்புத் தாது இங்கு தான் இருக்கிறது. 3,500 கோடி டன் 
நிலக்கரியும், 234 கோடி டன் இரும்புத் தாதும், 3,550 மில்லியன் டன் சுண்ணாம்புக் கல்லும் இங்கு இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. டாடா,எஸ்ஸார், வேதாந்தா, ஜிண்டால் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் இந்த இடங்களில் நிறுவனங்கள் தொடங்கத் துடிக்கின்றன. அதாவது மின் உற்பத்தியும், அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகளும், எஃகு உருக்காலைகளும், சுரங்கங்களும் அமைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருக்கின்றன. இவ்வளவு கனிம வளங்கள் உள்ள இடத்தில்தான் கோண்டு, முண்டா, கோல், ஓரான், சந்தால் உள்ளிட்ட பழங்குடி மக்கள் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய கனிமங்களை யாரும் கொள்ளையடித்துவிடாதபடி இத்தனை ஆண்டுகள் பாதுகாத்தவர்களும் இவர்கள்தான். ஆங்கில ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆண்டபோது இந்த இடங்களுக்குள் நுழைந்துவிடாதபடி தடுத்ததும் பழங்குடி மக்களே. லட்சக்கணக்கான இந்த மக்களை அங்கே இருந்து துரத்தி அடிக்க இந்த நிறுவனங்கள் துடிக்கின்றன. தாங்கள் வாழ்ந்த இடத்தை இழக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். 


விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக நந்திகிராமில் அமைய இருந்த ரசாயனத் தொழிற்சாலை கைவிடப்பட்டது. ஒரிஸ்ஸா ஸ்டீல் ஆலையும், சிங்கூரில் கார் தொழிற்சாலையும் கைவிடப்பட்டன. ஜார்கண்ட், ஒரிஸ்ஸாவில் அமைய இருந்த ஸ்டீல் தொழிற்சாலை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இப்படி அமைய இருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்தங்கள், தேர்ந்தெடுத்துள்ள இடங்கள், மக்கள் காலி செய்ய வேண்டிய கிராமங்கள் குறித்து வெளிப்படையான விளக்கங்களை அரசு தர மறுக்கிறது. எனவே, மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டு, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மனித உரிமையாளர்கள், பழங்குடி மக்கள், பத்திரிகையாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கலந்தாலோசனைப்படி அந்தப் பகுதியில் அமைய வேண்டிய திட்டங்களை வரையறுக்க வேண்டும். 
ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியோடு இந்த நிறுவனங்கள் தொடர்புடையவைதான். ஆனால்,மக்களை விரட்டிவிட்டு வளர்க்கப்படும் தொழிலால் ஒரு நாடு எப்படி மேம்பாடு 
அடைந்ததாகப் பெருமை அடைய முடியும்? லட்சம் தொழிற்சாலைகளை நிறுவலாம். ஆனால், ஒரு மலையைக்கூட உருவாக்க முடியாது! 


அந்த மக்களைப் பாருங்கள்!


சத்னம் என்ற எழுத்தாளர் மாவோயிஸ்ட் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குப் பயணம் போனார். "அவர்களின் வாழ்விடங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அம்மக்களின் முன்னேற்றத்துக்கு என எதுவும் செய்யப்படவில்லை. நாடு சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும், ஏழை மக்கள், பரம ஏழைகளாகவே ஆக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவர்களது வாழ்க்கைத் தரம் பரிதாப நிலையில் கிடக்கிறது. தான் வைத்திருக்கும் வில்லுக்கு மாட்ட மட்டுமே இரும்பு பயன்படும் என்ற அளவுக்குத்தான் அவர்களின் கல்வித்தரம் இருக்கிறது" என்று சொல்கிறார் சத்னம். கல்வி இல்லை. மருத்துவம் கிடையாது. சட்டப்படி கிடைத்திருக்க
வேண்டிய நிவாரணங்கள் தரப்படுவதுஇல்லை
ஆனால்கந்துவட்டிக்காரர்களாலும்,சிறுவியாபாரிகளாலும் இவர்கள் சுரண்டப்பட் டார்கள். போலீஸும், வனத் துறை அதிகாரிகளும் வைத்ததுதான் சட்டம். தட்டிக் கேட்கும் பழங்குடி ஆண்களைக் கொலை செய்வது, பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்வது கேட்பாரற்றுத் தொடர்ந்தது. எவ்வளவோ கோரிக்கைகள் வைத்தார்கள். எந்த வசதியும் செய்துதரப்படவில்லை. ஆனால், இன்று பன்னாட்டு கம்பெனிகள் வரப்போவது தெரிந்ததும் தந்டேவாடாவின் இரண்டு காடுகளுக்கு மத்தியில் பளபளப்பான சாலைகள் போடப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ஒரு நிறுவனத்துக்காக எல்லாம் செய்து தரும் மனோபாவம்தான் மக்களை மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளி இருக்கிறது. 


'நக்சல் பாதித்த பகுதிகளில் காடுகளை நிர்வகித்தல்' என்ற கருத்தரங்கம் கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் .சிதம்பரம், இந்தப் பகுதிகளின் மேம்பாட்டுக்காக 13 ஆயிரத்து 742 கோடி செலவிலான வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறிஇருக்கிறார். சாலைகள், குடிநீர் வசதி, மின்சாரம், மருத்துவம் ஆகியவற்றைச் செய்து தரப்போகிறார்கள். 1996-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பழங்குடிப் பகுதிகளின் பஞ்சாயத்து நிர்வாகச் சட்டத்தின்படி நிர்வாக நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும் என்று சொல்லும் இவர், 'சிறிய காடுகளில் கிடைக்கும் வளங்களை பழங்குடியினரே பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு உரிமை அளிக்கப்படும்' என்றும் கூறிஇருக்கிறார். 'வறுமைதான் நக்சல் தீவிரவாதத்துக்கான அடிப்படை' என்பதும் அவரது கண்டுபிடிப்பு. 


சரியான விஷயங்களை ஓரளவு உணர்ந்து ஒப்புக்கொள்வதாகவே .சிதம்பரத்தின் இந்தப் பேச்சு அமைந்திருக்கிறது. 'இந்த வளர்ச்சித் திட்டங்கள் மக்கள் மேம்பாட்டுக்காகவே செய்யப்படுகின்றன'என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. 
மேலும், இரண்டு பக்கமும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டு இருக்க, இவற்றைச் செய்ய முடியாது. பழங்குடி மக்களையும் உள் இழுத்துத்தான் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். 'இது ஓர் உள்நாட்டுப் போர்' என்பதை ஒப்புக்கொண்டு அரசாங்கம் இறங்கி வருவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால், மூன்று ஆண்டுகள் கழித்து 'மேலும் மூன்று ஆண்டுகளுக்குள் ஒழித்துவிடுவோம்!' என்று காலகட்டத்தை நீட்டித்துக் கொண்டேதான் போக முடியும். 


நக்சல்பாரி என்ற கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட 'வசந்தத்தின் இடி முழக்கம்' இன்று வரை கேட்பதற்குக் காரணம் நக்சலைட்டுகளின் செல்வாக்கு அல்ல; அரசாங்கத்தின் அலட்சியமே மிக மிக முக்கியக் காரணமாக அமைந்திருந்தது. அதை இன்றும் உணராவிட்டால் என்றும் முடியாது 

No comments:

Post a Comment