
ஜெயலலிதா அடிக்கடி ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறார். கருணாநிதியின் குடும்ப ஆட்சியை ஒழித்துக் கட்டுங்கள்.தி.மு.க., கருணாநிதியின் குடும்பத்தின் தலைமையில் நடந்து வருகிறது என்று சாடுகிறார்.
தமிழகத்தில் கருணாநிதியின் வாரிசுகள் பெரிய பதவிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்பது உண்மை.கருணாநிதி தமிழகத்தின் முதல்வர். மு.க.ஸ்டாலின் துணை முதல்வர்.மூத்த மகன் மு.க.அழகிரி மத்திய மந்திரி. பேரன் கலாநிதியும் மத்திய மந்திரி. இவற்றை மனதில் கொண்டே ஜெயலலிதா குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்கிறார்.
இந்தியாவில் இப்போது நடப்பது மக்கள் ஆட்சி.மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் 2004 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் நடந்து வரும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பார்க்கும்போது இந்தியாவில் நடப்பது புகழ்பெற்ற தலைவர்களின் வாரிசுகள் நடத்தும் ஆட்சியோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பாட்ரிக் ப்ரென்ச் என்பவர் ஒரு வெளிநாட்டு அரசியல்வாதி. இவர் இந்திய அரசியல்பற்றி எழுதிய நூலில் பல அரிய வியக்க வைக்கும் உண்மைகள் வெளியாகியிருக்கின்றன.

பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களுள் மொத்தம் 255பேர் இளைஞர்கள். முப்பது வயதிற்கும் குறைந்தவர்கள்.நிறையப் படித்தவர்கள்.இவர்களுள் இந்தியாவில் படித்தவர்களும் மேல்படிப்புக்காக பிரிட்டன் அல்லது அமெரிக்காவுக்குப் போய் படித்தவர்களும் உண்டு. இவர்கள் படித்தது பெரும்பாலும் பொருளாதாரம்.
இவர்கள் அனைவரும் புகழ் பெற்ற அரசியல் தலைவர்களின் பிள்ளைகள். தேர்தலில் களத்தில் இறங்கியபோது தந்தையின் பெயரை பெரிதும் பயன்படுத்தியவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் பார்க்க அழகானவர்கள். ஆடம்பரமான ஆடைகளை அணிபவர்கள். வசதிமிக்க கார்களில் வருபவர்கள். இவர்கள் நாட்டின் சேவையில் ஈடுபடத் துணிந்த இலட்சியவாதிகள் என்று பாமர மக்களால் கருதப்பட்டவர்கள்.வசதி படைத்த குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டவர்கள்!
அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் என்று கருதப்பட்டதால், நாட்டில் மீண்டும் மன்னர்கள் ஆட்சி வந்துவிட்டதோ என்று பாட்ரிக் பிரஞ்சிற்கு எண்ணத் தோன்றுமாம்!
பொதுவாக எல்லாவற்றையும் பார்க்கும்போது தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் அதிகமாகி வருகிறார்கள். குடும்ப ஆட்சி நடப்பது போன்ற பிரமை ஏற்படுகிறதாம்!
சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பார்க்கும்போது,அவர் நடத்துவது ஒரு தர்பார் போல் காட்சியளிக்கிறதாம்! எந்த ஒரு விஷயத்திலும் அவரைத் தட்டிக் கேட்க காங்கிரஸில் ஒருவரும் இல்லை என்பது ஒரு வாதம்!
சோனியா ஜனநாயக ரீதியில் ஆட்சி செய்வது போல் தோன்றினாலும் மறைமுகமாகக் குடும்ப ஆட்சி நடப்பதை யாரும் மறுக்க முடியாது.
இந்திராவுக்குப் பின் ராஜீவ் காந்தி, அதன்பின் சோனியா, மகன் ராகுல் காந்தி ஆகியவர்கள் நடத்தும் குடும்ப ஆட்சி வாரிசுகள் ஆட்சி என்று சொல்லுவதில் தவறு இல்லை.
இளம் வாரிசு எம்.பி.க்களின் பெயர்களை கொஞ்சம் அலசிப் பார்ப்போம். ராகுல்காந்தி ராஜீவ் காந்தியின் மகன்.ஜிதின் என்பவர் ஜிதேந்திரா பிரசாத்தின் மகன். ஜோதிராதித்யா குவாலியர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மாதவராவ் சிந்தியாவின் மகன். ராஜேஷ் பைலட்டின் மகன் சச்சின் இப்போது மத்திய மந்திரி சபையில் மந்திரி! காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் சகோதரியை மணந்தவர் சச்சின். ஒமர் அப்துல்லா பரூக் அப்துல்லாவின் மகன். அகிலேஷ் முலாயம்சிங் யாதவ்வின் மகன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளம் வாரிசுகள் என்ன சாதிப்பார்கள்
என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரிடம் கேள்வி கேட்டபோது, ‘இவர்கள் அனைவரும் உலகத்தைச் சுற்றிப் பார்த்தவர்கள். இவர்களுக்கென்று எந்த ஒரு இலட்சியமும் இல்லை!’ என்றாராம்.இளம் வாரிசுகளுக்கு வாக்களித்தவர்கள் கோடிக்கணக்கான பாமர மக்கள்.அவர்கள் தொகுதிகளில் இவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.இவர்கள் விலை மிகுந்த கார்களில் வாக்களித்தவர்களைப் பார்க்க கிராமங்களுக்குப் போகிறார்கள்.
அடிப்படை வசதிகள்கூட இல்லாத கிராமங்கள் இவை. சாலைகள் சரியாக இல்லை.குடி தண்ணீர் வழங்க முடியவில்லை.மின்சாரம் கூடத் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்படவில்லை.
இவர்கள் தமது தொகுதி மக்களைச் சந்திக்கும்போது பிரச்னைகளைச் சொல்லுகிறார்கள்.இளம் எம்.பி.க்கள் நினைத்தால் எதுவும் செய்ய முடியும் என்று நம்புகின்றனர். தொலைபேசியில் சொன்னாலே போதும் கிராம மக்கள் கேட்டவை அனைத்தும் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த இளம் எம்.பி.க்களுக்கு எதுவும் புரிவதில்லை. பிரச்னைகளைச் சமாளிக்க என்ன செய்ய வேண்டும்? எங்கே, எப்படி தொடங்க வேண்டும் யாருடன் பேச வேண்டும் என்பதெல்லாம் தெரியாதாம்!
இவர்கள் வெறும் வாரிசு எம்.பி.க்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து!
பெரிய தொழிலதிபர்களின் பிள்ளைகள் படித்து முடித்தபின் எப்படித் தமது தந்தையின் தொழிலில் பெரிய பதவியைப் பெறுகிறார்களோ, அதே போல் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் அரசியலில் நுழைந்து எம்.பி.யாகிறார்கள். குடும்ப வியாபாரத்தில் பிள்ளைகள் எதுவும் சாதிக்க முடிவதில்லை. அதே போல் வாரிசு அரசியலிலும் பிள்ளைகள் எதுவும் சாதிக்க முடிவதில்லை.
பாராளுமன்றத்தில் இவர்கள் பேசுவது கூடக் குறைவு.எந்த ஒரு பிரச்னையையும் மூத்த அரசியல்வாதிகள் மட்டுமே விவாதிக்கிறார்கள். இவர்களுக்கு வாதாடும் திறமை இருப்பதாகத் தெரியவில்லை!
இவர்களில் பலர் சோனியாவைச் சந்திக்க வேண்டும் என்றால்கூட, காங்கிரஸ் மூத்த தலைவர்களின் உதவியை நாடுகிறார்கள். துணிச்சலுடன் போய் சந்திக்கும் சக்தி இவர்களுக்கு இல்லையாம்!
ராகுல் காந்தியால் மட்டுமே நினைத்ததைச் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள்.ராகுல் அரசியலில் இளைஞர்களை நிறையவே சேர்க்க நினைத்துப் பாடுபட்டு வருகிறார். இளைஞர்கள், படித்தவர்கள் காங்கிரஸில் சேர்ந்து அடிமட்டத்தில் பணிகளைச் செய்தால் மட்டுமே காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்;தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைக்க முடியும் என்று நம்புகிறார்.
வாக்களித்த மக்களுக்கு உதவிகளைச் செய்யக்கூட ராகுல்காந்தி உத்தரவிட்டால் மட்டுமே எல்லாம் நடக்கும் என்பது இளம் எம்.பி.க்கள் கருத்து.
ராகுல்காந்தியின் பாணியில் மற்ற இளம் எம்.பி.க்கள் செயல்பட முடியவில்லை. தொகுதி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு எம்.பி.க்கும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.இதைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் மூத்த எம்.பி.க்கள் அல்லது மந்திரிகள் முட்டுக்கட்டை போடுகிறார்களாம்!ஆகையால் புதிய தலைமுறை எம்.பி.க்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை!பெரும்பணம் படைத்தவர்கள், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் அரசியலில் நுழைந்து எம்.பி.க்களாவது சுலபம். உதாரணமாக, குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவராவ் சிந்தியா, அவருக்குப் பின் அவர் மகன் ஜோதிராதித்யா சிந்தியா எம்.பி., யாகியிருக்கின்றனர்.
பாராளு மன்றத்திற்குப் போட்டியிட டிக்கெட் பெறுவதிலும் வாரிசுகளுக்கு எளிதில் வழி கிடைக்கிறது.
ஜிதேந்திர பிரசாத் மிகவும் வெற்றிகரமாகச் செயல்பட்ட காங்கிரஸ் அரசியல் தலைவர். ஆகையால் அவர் மகன் ஜிதினுக்கு எம்.பி. பதவிக்குப் போட்டியிட எளிதில் டிக்கெட் கிடைத்ததாம்!
சாதியின் அடிப்படையில் தொடங்கப்பட்ட கட்சிகளின் தலை வர்களும் தமது வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வருகிறார்கள். உதார ணமாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் தன் மகன் அகிலேஷை எம்.பி. யாக்கியிருக்கிறார்.
இளைஞர்கள் எம்.பி.க்களாவதைப் பெரிதும் பத்திரிகைகளும் தனியார் தொலைக்காட்சிகளும் வரவேற்றிருக்கின்றன. அரசியலில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பம் என்பது போல் வர்ணித்திருக்கின்றன.
மதிப்பின் அடிப்படையில்தான் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகமாகக் காணப்படுகிறதாம்!
அரசியல்வாதிகளின் வாரிசுகள் படையெடுப்பால் மற்ற இளைஞர்களுக்கு எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்த வகையில் ஜனநாயகத்தின் கதவுகள் மூடப்பட்டிருக்கின்
றன என்பது உண்மை!பாராளுமன்றத்தில் காங்கிரஸ் 208 இடங்களைப் பிடித்திருக்கிறது. இதில் 23 எம்.பி.க்கள் பெண்கள். இவர்களில் 19 பேர் வாரிசுகள்! பாரதிய ஜனதாவுக்கு மூன்று வாரிசு எம்.பி.க்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
குடும்ப வியாபாரம் என்பதுபோல் குடும்ப அரசியலும் நாட்டில் உருவாகிவிட்டது. தந்தை, தாய், மகன், மகள் என்று ஒரே குடும்பத்தில் எம்.பி.க்கள் ஆனதும் உண்டு.
இளைஞர்கள் நுழைந்திருப்பது ஒரு பெரிய மாற்றம் என்று கருதப்பட்டாலும் இந்த இளம் எம்.பி.க்கள் சாதனை புரிய முடியவில்லை.இவர்கள் சாதனை புரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதே உண்மை.இதனால் பாதிக்கப்படுபவர்கள் வாக்காளர்கள் மட்டுமே!
No comments:
Post a Comment