
வழக்கமான சினிமா நடிகர்களைப் போல இல்லை நாசர்.வெள்ளித் திரைக்கு முன்னால் கிடைக்கும் நட்சத்திர அந்தஸ்தை தன் அன்றாட வாழ்க்கையோடு முடிச்சுப்போட்டு பார்க்க விரும்பாத எளிய மனிதர்.
‘என்ன செய்யப் போகிறோம், இதற்காக?’ ஈழப் போராட்ட நூல் வெளியீட்டு விழாவுக்கு எந்த அழைப்புமே இல்லாமல் தானே வந்து மேடையின் முன்னே ஏறி நின்றார்.அந்த நியாயம் அவரை சுட்டு இருக்கிறது. அவரோடு பேசினோம்.’
‘‘நண்பர்கள் மூலம் தான் இந்தப் புத்தகம் என் கைக்கு வந்து சேர்ந்தது. பல நாட்கள் வேலையில்,புரட்டாமல் மேஜையிலேயே வைத்திருந்தேன். ஒருநாள் இரவு உட்கார்ந்து திறந்து பார்த்தபோது பக்கத்தில் என் மகன்கள் இருந்தார்கள்.அவர்களின் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்று மறைத்தேன். பிஞ்சுப் பிள்ளைகள் ரத்தமும் சதையுமாக சாகக் கிடக்கும் காட்சியை எப்படி என் குழந்தைகளிடம் காட்டுவது? உயிரோடு செத்துக் கொண்டிருக்கும் சக மனிதனின் துயரத்தை எப்படி அவர்களுக்கு சின்ன வயதிலேயே பழக்குவது? என்ற பயம் நெஞ்சுக்குள் பதைத்தது. ராத்திரி நேரத்தில் தனியாக உட்கார்ந்துகொண்டு நான் கண் கலங்குவதை என் மகன்கள் பார்த்தார்கள்.உடனே ‘‘என்னப்பா அது?ஏன் ஒரு மாதிரி இருக்கிறீங்க?’’ என்றார்கள். நான் அப்போதும் மௌனம் பழகினேன். என் கையில் இருந்த புத்தகம் என் பெரிய மகனின் கைக்கு மாறியது. அதில் உள்ள ஈழத் தமிழர்களின் படுகொலைக் காட்சியைப் பார்த்துவிட்டு அவன் பதறிப் போனான். ‘‘என்னப்பா? இதுக்காக நாம என்ன செய்யப் போறோம்?’’ என்றான். என்னிடம் பதில் இல்லை?! இப்படி ஒரு துயரத்தைக் கண்டும் காணாமல் நாம் வாய்மூடி மௌனமாய் இருக்கிறோமே?நமக்கு மனசாட்சி இல்லையா? என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்தேன்.’’
அழைப்பிதழில் உங்கள் பெயரே இல்லை.ஆனாலும் மேடையில் ஒருவனாய் நின்றீர்களே?
‘‘யூதர்கள் பிரச்னையைப் பேச நான் யூதனாக இருக்கத் தேவையில்லை. பாலஸ்தீனியர் களின் பிரச்னையை ஒரு பாலஸ்தீனியர்தான்
பேசவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஈழத் தமிழனின் கொடுமையைத் தமிழன்தான் பேசவேண்டும் என்று நினைப்பதுகூட தவறுதான். இது ஒரு மனிதப் படுகொலை.இதை எதிர்த்துப் பேச நான் மனிதனாக இருந்தால் போதும். இங்குள்ள மக்களுக்கு இது பெரிய விஷயமாகவே படவில்லை.பெரிய விவாதப் பேச்சாக ஈழப்பிரச்னை தமிழக மக்களிடம் மாறவில்லை.இது வேதனைக்குரிய விஷயம் இல்லையா?சக உறவு செத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டு கைப்பாவையாய் நாம் இருக்கிறோமே?இந்தப் போக்கிற்கு உள்ளூர் அரசியல்வாதிதான் காரணம் என்கிறேன்!’’இவ்வளவு பெரிய கொடுமையைப் பார்த்துக்கொண்டு மக்கள் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும்?
‘‘இங்குள்ள தமிழன் தன்னுடைய உரிமையைக் கேட்டுப் பெறவே தைரியம் இல்லாமல் இருக்கிறான். தனக்கு எந்த உரிமைகள் வேண்டும் என்று ஒரு பட்டியல் போடக்கூட விரும்பாதவன்தான் இந்தியத் தமிழன். இந்தப் பிரச்னையை மீடியா பெரிய அளவில் கொண்டு சேர்க்காததும் ஒரு காரணம். ஊடகங்களின் இருட்டடிப்பு பெரிய சதியாகப் படுகிறது எனக்கு.’’
சீமான் போன்ற உங்களின் சக துறை ஆட்கள் இதில் விசேஷ கவனம் செலுத்துகிறார்கள். அவர்களோடு சேர்ந்து நிற்பீர்களா?
‘‘நெல்லிக்காய் மூட்டை இல்லை மக்கள். எல்லோரையும் ஒரு இடத்தில் கொண்டு வந்து குவிப்பதற்கு.
இந்தப் பிரச்னை ஏன் மீண்டும் மீண்டும் அரசியல் ஆக்கப்படுகிறது? அரசியல் கலப்பில்லாமல் பேச நம்மால் முடியாதா? எந்த சாயலும் இல்லாமல் மக்களின் பிரச்னையைப் பேச பெரியாரால் முடிந்தது இல்லையா? காந்தி கூட அரசியல் ரீதியாகப் போராடினார். ஆனால் அரசியல் கட்சியாக காங்கிரஸ் நீடிப்பதை அவர் எதிர்த்தார். சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரசை கலைக்கச் சொன்னார். ஓட்டு மாற்றப்படுவதை நாம் விரும்பவில்லை. இயக்கங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு. மக்களை கட்டாயப்படுத்தி ஒன்று சேர்த்துக் காட்டுவதில் ஒரு பயனுமில்லை. மனதளவில் ஒரு எதிர்ப்பை வலுவாக கட்டமைக்கவேண்டும்.சினிமா நடிகர்,நடிகைகள் எல்லோரும் ராமேஸ்-வரத்தில் கூடினார்கள்.காவேரிப் பிரச்னைக்காக கூட கூடினோம். அதுக்கப்புறம் என்ன? அமைதிதான். இவ்வாறு கூடி தொழில்துறை சார்ந்த பலத்தைக் காட்டலாம். அது எதற்குப் புண்ணியம்? தனிநபர் விவாதமாக இந்தப் போராட்டம் மாறவேண்டும். எல்லாவற்றிற்கும் அடையாள ரீதியாக ஆதரவைக் காட்டுவதோடு நின்றுவிட்டால் அதற்கு நான் என்ன பதில் சொல்லமுடியும்?’’மக்களை சமூகம் சார்ந்து சிந்திக்கவிடாமல் தடுப்பது சினிமாதான் என்ற எதிர்க்குரல் பலகாலமாக எழுப்பப்படுகிறது.இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
‘‘பெரிய விவாதத்திற்குரிய விஷயம் இது. போகுற போக்கில் பதில் சொல்ல முடியாது. நீங்கள் சொல்வதைப் போல சினிமா இங்கே பவர்ஃபுல் மீடியாவாக இருக்கிறது. பிராக்டிக்கலாகவும் அரசியல் ரீதியாகவும் அதன் வீச்சு பெரிய அளவில் போய்ச் சேர்ந்திருக்கிறது உண்மைதான். உலகத்திலேயே ஊழலை எதிர்த்தும் அரசியலை எதிர்த்தும் நிறைய படங்கள் வெளிவந்த நாடு நம்முடைய நாடாகத்தான் இருக்கும். ஆனால் நாம் ஊழலை எதிர்த்து என்றைக்காவது போராடி இருக்கிறோமா? அரசை எதிர்த்து ஒரு சின்ன எதிர்ப்பையாவது காட்டி இருக்கிறோமா? முதலில் விழிப்புணர்வு தேவை.அந்த உணர்வு இருந்தால்தான் உங்களின் உரிமையை முதலில் கேட்கமுடியும்!’’.
- கடற்கரய்
படங்கள் : ஆர்.சண்முகம்
No comments:
Post a Comment