Saturday, 29 January 2011

விஜயகாந்த்-கருணாநிதியை வீழ்த்த இதையும் செய்வேன்!


கூட்டணிக் கொடி பிடிக்கும் விஜயகாந்த்!
ப.திருமாவேலன், 


''தே.மு.தி.க. இந்தப் பக்கம் வந்துவிடாதா?'' என்று ஜெயலலிதா ஏக்கத்துடன் காத்திருக்கிறார். ''விஜயகாந்த்தை அந்தப் பக்கம் போக விட்டுவிடக் கூடாது. நம்ம பக்கம் கொண்டு வர வாய்ப்பு இருக்கா?'' என்று இன்னமும் விசாரித்துக்கொண்டு இருக்கிறார் கருணாநிதி. 9 முதல் 11 சதம் வரை வாக்குகளை வைத்துஇருக்கும் விஜயகாந்த்தை வளைப்பது யார் என்பதுதான் இன்றைய தமிழ்நாட்டு அரசியல். சேலம் மாநாட்டில் அறிவிப்பேன் என்றார்... அறிவிக்கவில்லை. விஜயகாந்த் எடுக்கும் தேர்தல் படத்தின் க்ளைமாக்ஸ் இன்னமும் லீக் ஆகாத நிலையில், அவரது மவுசு குறையாமல் இருக்கிறது.
உழவர் திருநாள் அன்று சந்தித்தபோது... சேலம் கொடுத்த உற்சாகம் முகத்தில் தெரிந்தது!
''சேலம்... செம சக்சஸ் சார்! கட்சி ஆரம்பிச்ச இந்த ஆறு வருஷத்தில் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் என்னோடு இருக்காங்க. ஒவ்வொரு ஊரிலும் அவங்க முகங்களைப் பார்க்கும்போது உற்சாகமா இருக்கும். சேலத்தில் எல்லோரையும் மொத்தமாப் பார்த்தா... சந்தோஷத்துக்குச் சொல்லவா வேணும்? இதில் எத்தனை பேர் எம்.எல்.ஏ, இல்லேன்னா எம்.பி. ஆகிட முடியும்? ஆனாலும், அவங்க என் மீது வெச்சிருக்கிற நம்பிக்கை மட்டும்தான், அழிக்க முடியாத சொத்து. இது எத்தனை வருஷம் ஆனாலும் குறையாது... இன்னும் இன்னும் கூடும்!''
''கூட்டணியைப்பற்றிய அறிவிப்பு இல்லாததால், கட்சிக்காரர்கள் சோர்ந்துபோய்த் திரும்பியதாக விமர்சனம் வந்ததே?''
''யார் சொன்னது? வரும்போது இருந்ததைவிட இன்னும் டபுள் உற்சாகத்தோடுதான் என் ஆட்கள் ஊருக்குத் திரும்பிப் போயிருக்காங்க. ஏன் தெரியுமா? லட்சக்கணக்கான தொண்டர்களிடம்தான் 'கூட்டணி வைக்கலாமா? வேண்டாமா?’ என்று நான் கேள்வியைக் கேட்டேன். கேப்டன் அறிவிக்கிறதை ஏத்துட்டுப் போகலாம்னு வந்தவர்களை உட்காரவெச்சு, 'நீ சொல்லுப்பா... நாம என்ன பண்ணலாம்?’னு கேட்டேன். மத்த கட்சி மாதிரி செயற்குழு, பொதுக்குழு கூடுறதுக்கு முன்னாலயே தீர்மானத்தை எழுதிவெச்சுக்கிட்டு வாசிச்சுட்டுப் போற கட்சி இல்லை இது.
தொண்டர்கள் எனக்கு ஆலோசனை சொல்லி இருக்காங்க. அதைச் செய்ய நான் காத்திருக்கேன். மற்றபடி, தொண்டன் சோர்ந்துபோனதாகச் சொல்வது பொய். எது செய்தாலும் அவங்க நல்லதுக்குத்தான் செய்வேன். என்னோட சுயநலத்துக்காகச் செய்ய மாட்டேன்!''
''ஏதோ கருணாநிதியைத் திட்டித் தீர்ப்பதற்காக நடத்திய மாநாடுபோலவே இருந்ததே?''
''77-ம் வருஷத்துல இருந்து 87-ம் வருஷம் வரைக்கும் கருணாநிதி யாரைத் திட்டிக் கட்சி நடத்தினார்? புரட்சித் தலைவரைத்தானே? அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை விட்டுட்டு, மற்ற கட்சிகளையா கல்யாண வீட்டுலயும் காதுகுத்து வீட்டுலயும் கருணாநிதி திட்டினார்? இன்று தமிழ்நாட்டை ஆள்வது கருணாநிதி. அதிகார நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற அவர்தான் இந்த நாட்டில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அவரைப்பத்திப் பேசினா என்ன தப்பு? பேசாம இருந்தாத்தான் தப்பு!
விலைவாசி உயர்ந்துட்டே போகுதேன்னு சொன்னா, நேரடியா அதுக்குப் பதில் சொல்லட்டும். தொண்டனைப்பத்திக் கவலைப்படாம, உங்க குடும்பத்துக்காகவே கட்சி நடத்துறீங்களேன்னு கேட்டா, அதுக்கு நியாயமான பதிலைச் சொல்லட்டும். எல்லாத் தொழிலையும் உங்க குடும்பம் கபளீகரம் பண்ணுதேன்னு கேட்டா, அப்படி எல்லாம் இல்லைன்னு சொல்றீங்களே... அதுக்காவது ஆதாரம் கொடுக்க வேணாமா? ஒரு காலத்துல, ஒவ்வொரு ஊரிலும் பணக்காரன் யார்னு கேட்டா... யாராச்சும் ஒரு தொழிலதிபரைக் காட்டுவாங்க. ஆனால், இன்னிக்கு தெருவுக்குத் தெரு பணக்காரனா தி.மு.க-காரன் இருக்கானே? கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஒவ்வொரு மந்திரியும் பத்து வருஷத்துக்கு முன்னால வெச்சிருந்த சொத்து என்ன... இன்னிக்கு வெச்சிருக்கிற சொத்து என்ன? பட்டியல் கொடுத்துட்டு தேர்தலைச் சந்திக்கட்டுமே கருணாநிதி. இதை எல்லாம் பேசாமல், வேறு எதைப் பேசச் சொல்றீங்க? அவருக்கும் எனக்கும் என்ன பங்காளிச் சண்டையா? வாய்க்கால் வரப்புத் தகறாரா? அவரு ஒழுங்கா இருந்திருந்தா... நான் ஏன் சார் கட்சி ஆரம்பிக்கப்போறேன். அவருக்கு வேண்டுமானால் நாட்டைப்பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். எனக்கு இருக்கு!
எப்பப் பார்த்தாலும் பாராட்டு விழாக்களில் உட்கார்ந்திருப்பதுதான் ஒரு முதலமைச்சரோட வேலையா? அரிசியும், பருப்பும், வெங்காயமும், தக்காளியும் என்ன விலை விக்குதுங்கிற கவலையே நாலரை வருஷமா அவருக்கு இல்லையே. ஆட்சி முடியப் போகும்போது, விலைவாசியைக் குறைக்க ஆலோசனைக் கூட்டம் போட்டா, விலை குறைஞ்சிருமா? யாரை ஏமாத்த இந்த நாடகம்? கருணாநிதி தன்னைத்தானே ஏமாத்திக்கப்போறார். அது இன்னும் நாலு மாசத்துல தெரிஞ்சிரும்!''
'' 'தி.மு.க. அரசு ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறது. பீகார் நித்தீஷ்குமார் மாதிரி, கருணாநிதி நிம்மதியாக ஜெயித்துவிடுவார்’ என்று அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் சொல்கிறார்களே?''
''முன்னணித் தலைவர்கள்னு யாரைச் சொல்றீங்க? மந்திரிகளையா? அவங்களை போலீஸ் துணை இல்லாமல் ஏதாவது கிராமத்துக்குள் போய் விசாரிக்கச் சொல்லுங்க. பேய் அறைஞ்ச மாதிரிதான் வெளியே வருவாங்க. யதார்த்தம் வேற மாதிரி இருக்கு சார். கருணாநிதியின் சாதனைகளால் பொதுமக்கள் அடைந்த வேதனைதான் நிறைய!
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட்டேன்னு சொல்லுவாரு. அரிசியை ஊறவெச்சுத் திங்கிறதா என்ன? ஒரு கொழம்பு வைக்க 20, 30 ரூபா வேணும். கடத்தி விக்குறவங்களுக்குத்தான் அந்த அரிசி ரொம்பப் பயன்படுது. இலவசமா டி.வி. குடுத்தோம்னு சொல்வாரு... கேரளாவுலதான் தமிழ்நாட்டு அரசு டி.வி. அதிகமா ஓடுது. டி.வி-யின் மூலமா கேபிள்களின் எண்ணிக்கையைக் கூட்டி, கட்டணம் வசூலிச்சு அதிலும் கருணாநிதி குடும்பம்தானே நன்மை அடைஞ்சது? 108 ஆம்புலன்ஸ் இவரோட திட்டம் அல்ல... அது மத்திய அரசாங்கத்தோட திட்டம். வீடு கட்டும் திட்டத்துல இருக்கிற கூத்து வேற எதுலயும் கிடையாது. 75 ஆயிரம் கொடுப்பாங்களாம். நாமே கட்டிக்கணுமாம். செங்கல், மணல், ஜல்லி, கம்பி விக்கிற விலைக்கு மொட்டைச் சுவர் மட்டும்தான் கட்ட முடியும்? நிலாச் சோறு சாப்பிடலாம். வேற வழியே கிடையாது. அதுலயும் பாதி ரூபாய் மத்திய அரசாங்கம் தருது. அதையும் இந்த கருணாநிதி மறந்தும் சொல்ல மாட்டாரு!
மெடிக்கல் இன்ஷூரன்ஸ் குளறுபடிகளில் எத்தனையோ கதை இருக்கு. அவசியம் இல்லாத ஆபரேஷன்கள் ஆயிரக்கணக்குல நடக்குது. அத்தியாவசிய ஆபரேஷன்கள் செய்ய மறுக்கிறாங்க. இது தனியார் ஆஸ்பத்திரிகள் இன்னும் பணக்காரங்க ஆகத்தான் பயன்படுது. இப்படி கருணாநிதி கைவெச்சது  அத்தனையும் கோளாறு. புரட்சித் தலைவர் சொன்ன மாதிரி, 'மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலன் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’. எல்லாத் திட்டங்களுக்கும் இதுதான் அடிப்படை!''
'' 'கருணாநிதிக்கு திரையுலகப் பொன்விழா நடத்தியபோது, விஜயகாந்த்துக்கு இதெல்லாம் தெரியாதா’ என்று கேட்கிறதே முரசொலி?''
''பொன்விழா நடத்தியது நான்தான்கிறதை ஒப்புக்கிட்டதே பெரிய விஷயம்தான்! திரை உலகத்தில் கலைஞர் நுழைஞ்சு 50 வருஷம் ஆச்சுன்னு தி.மு.க. உறுப்பினரா இருக்கும் நடிகர் ஒருத்தர் திருச்சியில் பேசினாரு. ஆனா, அதை எடுத்துச் செய்ய யாராலும் முடியலை. அன்னிக்கு அ.தி.மு.க. ஆட்சி நடந்ததால், பலரும் பயந்தாங்க. இந்தத் தகவலை என் நண்பர் ராவுத்தர்கிட்ட சொல்லி,  என் கிட்ட வந்து பேசினாங்க. நான் முக்கியமான ஆட்கள் கிட்ட பேசினேன். 'தேர்தல் வரப்போகுது. கலைஞர் ஆட்சிதான் வரப்போகுதுன்னு சொல்றாங்க. முதலமைச்சரான பிறகு வெச்சுக்கலாம்’னு சிலர் ஆலோசனை சொன்னாங்க. 'கலைஞர் பதவிக்கு வந்ததும் விழா எடுக்கிறதை எல்லாம் வியாபாரிகள் பார்த்துப்பாங்க. பதவி இல்லாதப்பதான் நாம எடுக்கணும்’னு சொன்னேன். பிரமாண்டமா நடத்தியும் கொடுத்தேன். மனசாட்சி மறக்காம இருந்தா... இது கலைஞருக்கு ஞாபகம் இருக்கும். மற்றபடி என்னை எதிர்க்கிற வியாபாரிகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பலை!''
''உங்களது தேர்தல் பிரசாரத்தில் மையமாக இருக்கப்போகும் விஷயங்களில் ரெண்டு சொல்லுங்களேன்..?''
''முதலாவது விலைவாசி! எல்லா வீட்டையும் பாதிக்கிற விஷயம் அதுதான். அடுத்ததா, இந்த நாட்டைக் கரையானா அரிச்ச ஸ்பெக்ட்ரம்! இந்த ரெண்டும்தான் கருணாநிதியை வீழ்த்தப்போகுது. சொந்தக் காசைக் கொடுத்து சூன்யம் வெச்சுக்கிட்ட மாதிரி, வீட்டுக்கு வீடு டி.வி-யைக் கொடுத்து நியூஸ் பார்க்கவெச்சு, 'நான் ஊழல்வாதி’ன்னு கருணாநிதியே எல்லா மக்களுக்கும் உணர்த்திட்டார். அண்ணாவால் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுங்கிற மூன்று வார்த்தைகள் பிரபலமாச்சு. கருணாநிதியால் ஊழல், ஒழுக்கக்கேடு, சுயநலம் மூணும் ஃபேமஸ் ஆகியிருச்சு. ஆ.ராசா என்ற ஆளால் தி.மு.க. தன்னோட ராஜாங்கத்தை இழக்கப்போகிறது. இமயத்துல தமிழ் மன்னன் வீரக் கொடி நாட்டினான்னு பேசியே வளர்ந்த கட்சி, உலக வரைபடத்தில் ஊழல் கொடியை நாட்டுவதற்குத்தான் பயன்பட்டு இருக்கு. இந்தக் குற்ற உணர்ச்சி கருணாநிதிக்கோ அவரது கட்சியின் முன்னணித் தலைவர்களுக்கோ இல்லைங்கிறது தான் வேதனையான விஷயம். இவ்வளவுக்குப் பிறகும், 'என் உதவியாளர்கள் சொல்வதைப்போல, நான் ஊழலுக்கு நெருப்பு’ன்னு கருணாநிதி சொல்றார். யார் சொல்றதாம்? உதவியாளர்கள்! அண்ணா சொன்னார், பெரியார் சொன்னார்னு கருணாநிதியால் சொல்ல முடியலை. ஊழலுக்கு அவர் நெருப்பு அல்ல. அவர்தான் ஒட்டுமொத்தப் பொறுப்பு!
சி.பி.ஐ. ரெய்டு நடக்குதேன்னு கேட்டா... இது வழக்கமானதுதான்னு சொல்றார். என்கொயரிக்குக் கூப்பிடுறாங்களேன்னா... அதுவும் வழக்கமானதுதானாம். தினமும் காலையில பேப்பர், பால் பாக்கெட் போடுறது மாதிரி எல்லார் வீட்டுலயும் சி.பி.ஐ. ரெய்டா நடக்குது?
நீரா ராடியாவும் பூங்கோதையும் பேசிக்கிட்டதைப் பத்திக் கேட்டா, 'ஆமா, ரெண்டு பொம்பளைங்க பேசிக்கிட்டாங்க'ன்றார். ரெண்டு பொம்பளைங்க சப்பாத்தி சுடுறதைப் பத்தியா பேசினாங்க? சம்பாதிக்கிறதைப் பத்தியில்லே பேசுனாங்க!
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பால் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேன்னு பதவிப் பிரமாணம் பண்ணிக்கிட்ட மந்திரியைப் பத்தி... உங்க அமைச்சரவையில இருக்கிற மந்திரியைப் பத்திக் கேள்வி கேட்டா... முதலமைச்சர் பதில் சொல்ற அழகா இது?
கருணாநிதிகிட்ட கேள்வி கேட்கிறதுக்கு முன்னால ஆயிரம் தடவை யோசிக்கணும்னு சொல்வாங்க. ஆனால், விதியைப் பாருங்க. ஸ்பெக்ட்ரம் பத்தி என்ன கேட்டாலும், அவரால் பதில் சொல்ல முடியலை. எல்லாத் தவறுகளுக்கும் பக்கம் பக்கமாத் தன்னிலை விளக்கம் தர்ற அவரால், இதுக்கு எதுவும் சொல்ல முடியலை. 'ஊருக்கு உழைப்பேன்’னார் எம்.ஜி.ஆர். இவரு ஊழலுக்கு உழைக்கிறார். நீதிக்குத் தலை வணங்குன்னு அவர் சொன்னார். இவரு நிதிக்குத்தான் தலை வணங்குறார். இதனால்தான் தலை கவிழப்போறார்!''
''ஜெயலலிதா பற்றி நீங்கள் பேசுவது இல்லையே?''
''அவங்கதான் இப்போ ஆட்சியில் இல்லையே! என்னைப்பத்தி அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க. அதுக்கு நான் பதில் சொன்னேன். அதுக்குப் பிறகு அவங்களும் என்னைப்பத்திப் பேசுறது இல்லை. நானும் பேசுறது இல்லை!''
''ஜெயலலிதாவை விமர்சித்து உங்களது கட்சிக்காரர்கள் விளம்பரம் கொடுத்ததைத் தொடர்ந்து அவசர அவசரமாக நீங்கள் மறுப்புக் கொடுத்தீர்களே?''
''அப்படி ஒரு விளம்பரத்தை என்னுடைய கட்சிக்காரர்கள் கொடுக்கவில்லை. கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவரது பெயரால், அது வெளியிடப்பட்டதால் மறுக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. திருவள்ளூர் சங்கீதா என்ற உறுப்பினர் தி.மு.க-வைக் கடுமையாகத் திட்டிக் கொடுத்த விளம்பரத்தை நிறுத்தி இருக்காங்க. அதே மாதிரி இந்த விளம்பரத்தையும் படிச்சுப் பார்த்துட்டு எங்க கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அவங்க கேட்டிருந்தா இவ்வளவு பெரிய பிரச்னையே வந்திருக்காது.  ஆனால், குறுக்குப் புத்தியால் யார் அப்படி விளம்பரம் தயார் பண்ணினாங்கன்னும் எனக்குத் தெரியும்!''
''ஜெயலலிதாவை விமர்சிக்க வேண்டாம் என்று சொன்னதன் உள் அர்த்தம் என்ன? அவரோடு கூட்டணி உறுதியாகிவிட்டதா?''
''கொடுக்காத விளம்பரத்தை மறுத்தால், அதுக்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்வீங்களா? என்னுடைய இலக்கு ஒண்ணுதான், கலைஞரை வீழ்த்த வேண்டும். அதுக்காக எதையும் செய்யத் தயார்! எந்த வியூகம் கலைஞரை வீட்டுக்கு அனுப்புமோ... அதை விஜயகாந்த் செய்வான். அதுக்காக எதையும் இந்தத் தேர்தலில் செய்து முடிப்பான்.
இந்தியா மீது சீனா படையெடுத்தபோது, அதுவரை திராவிட நாடு கேட்டுக்கிட்டு இருந்த அண்ணா, அதைத் தள்ளிவைத்தார். 'வீடு இருந்தால்தான், ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான், அதன் பிறகு போராட முடியும்’னு சொன்னார். கருணாநிதி கையில் ஆறாவது முறையா ஆட்சியைத் தூக்கிக் கொடுப்பது தமிழ் நாட்டுக்கு ஆபத்தான காரியம். அது நடந்துவிடக் கூடாது. 'கலைஞரின் வீடா? தமிழ் நாடா?’ என்ற அடிப்படை யில் என் வியூகம் அமையும்!''
'' 'விஜயகாந்த் தனியாக நின்றால், கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்கள் இரண்டாகப் பிரியும். தி.மு.க. எளிதாக ஜெயித்துவிடும் என்பதுதான் ஆளும் கட்சியின் கணக்காக இருக்கிறது...''
''அது தப்புக் கணக்கு! தி.மு.க. தன்னுடைய வாக்கு வங்கியை இழந்துவிட்டது. பழைய தி.மு.க-காரன், கருணாநிதியின் குடும்ப அரசியலைப் பார்த்து, வீட்டுக்குள் முடங்கிவிட்டான். புதிய இளைஞர்கள் வரவே இல்லை. நடுத்தர மக்களுக்கு இவங்களைப் பார்த்தாலே, எரிச்சலா இருக்கு. போன தேர்தலில், அதுக்கு முந்திய தேர்தலில் கருணாநிதிக்காக ஓட்டுப் போட்ட பாதிப் பேர், இந்தத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டாங்க. கருணாநிதி இதுவரைக்கும் மாட்டிக்கிட்டுத் திரிஞ்ச தமிழினத் தலைவர் முகமூடியும் கிழிஞ்சுபோச்சு. 'தமிழா... தமிழா’ன்னு சொல்லி வந்த பசப்பு வார்த்தைகள் எல்லாம், ஈழப் படுகொலைக்குப் பின்னால் பயன்படாது. அவரோட பேச்சுக்கு மயங்கினவங்க, எழுத்துக்காக உருகினவங்க, போராட்டக் குணத்துக்காக வந்தவங்க... எல்லாரும் இந்த அஞ்சு வருஷத்துல எதிராகத் திரும்பிட்டாங்க. தலைகீழா நின்னாலும் சரி, கருணாநிதியால் இனி ஒருமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது!''
''உங்கள் மீது தனிப்பட்ட முறையில் கடுமையான விமர்சனங்களை முரசொலி வைக்கிறதே?''
''அவங்க விமர்சனம் பண்ணினால், விஜயகாந்த் வளர்ந்திருக்கான்னு அர்த்தம். சேலம் கூட்டத்தைப் பார்த்து பொறாமையால் தூக்கம் வராம தவிக்கிறாங்கன்னு அர்த்தம். எனக்கும் அவங்களை மாதிரிபேசத் தெரியும். கருணாநிதியுடன் பழகிய காலத்தில் பார்த்த விஷயங்களை நான் சொல்ல ஆரம்பிச்சா, அவரால் தலை நிமிர்ந்து நிற்க முடியாது. பழகிய பாவத்துக்காக பெர்சனல் விஷயங்கள் பேசாம இருக்கேன்!''
''தனியாக நிற்பது உங்கள் கட்சியின் எதிர்காலத்துக்கே நல்லதல்ல என்கிறார்களே?''
''கருணாநிதியை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேரணும்கிறதுதான் சேலம் மாநாட்டின் தீர்மானம். யாருடன் சேர்வது... யார், யாரைச் சேர்ப்பது... எல்லாத்தையும் யோசிச்சிட்டு வர்றேன். அரசியல்ல ஒரு முடிவைச் செயல்படுத்த ஒரு வாரம்கிறதே அதிகமான காலம். அப்படி இருக்கும்போது, தேர்தலுக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு சார்!''

No comments:

Post a Comment