Sunday, 30 January 2011

யாரையோ திருப்திப்படுத்த தாமரை எழுதிய கடிதத்திற்கு ஒரு சூடன பதில் கடிதம்


சீமான் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்: கவிஞர் தாமரை
[ 30 சனவரி 2011 ]
போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஜெயலலிதாவை தேர்தலில் ஆதரிப்பதாக சொல்லியுள்ள இயக்குநர் சீமானுக்கு கவிஞர் தாமரை பகிரங்க கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

  அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். ‘இனியவளேபடத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். 

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோஎதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! 

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கிநாம் தமிழர்கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன். 

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி! 

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின்நம்பிக்கை நாயகனாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன். 

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளைநான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன். 

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் .தி.மு. வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக .தி.மு. வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி? 

யார் இந்த ஜெயலலிதா? 

போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடையஉண்மையான உள்ள வெளிப்பாடு’! 

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர். வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர். இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர். இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர். 

அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காகதமிழீழம் அமைத்துத் தருவேன்என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர்சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தைநம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர்இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது? 

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே? 

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானியஇராணுவத்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்? 

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா? 

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா? 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லதுஇனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?.. 

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளதுஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர? 

ஒருவேளை கூட்டணியில்திடீர்மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள்வியூகம்என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா? 

அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களைவைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும்ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர? 

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்துபோய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? 

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது! 

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள். 

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். 

ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்! 

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமானதேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடுஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே? 

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால்திராவிட தேசியத்தின்தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும்இந்திய தேசியத்தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. 

பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை. 

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களேஉங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை! 

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். 

தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம். 

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது? 

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன். 

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்றுநாம் தமிழர்கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம். 

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம். 

மற்றத் தொகுதிகளில்திமுக வும் அதிமுக வும் ஒன்றேஎன்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள். 

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்! 

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன். 

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்! 

என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு 

உங்கள் 

தாமரை 

20.01.2011
 

சென்னை 24 

s.tamarai@gmail.com
 



தமிழ் உணர்வாளர் கவிஞர் தாமரை அவர்கட்கு! – நக்கீரன் மடல்

வணக்கம். உங்கள் தமிழ் உணர்வை மெச்சுகிறேன். உங்களைப் போன்ற இனப் பற்றாளர்கள் இருப்பதால்தான் தமிழனின் மானம் மொத்தமாகக் கப்பால் ஏறாமல் கொஞ்சமாவது மிஞ்சியிருக்கிறது! 

நீங்கள் கூறிய பல யோசனைகளை சீமான் ஏற்றுக் கொண்டால் அது முதல்வர் கருணாநிதியையும் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்குச் சமமாகிவிடும். 

தமிழினப் படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் திமுக அல்ல. அம்மாவை விட அய்யா நல்லவர். அதன் அடிப்படையில் காங்கிரசை எதிர்ப்போம் திமுக வை (மறைமுகமாக) ஆதரிப்போம் என்கிறீர்கள். இதைத்தான் சுபவீ காரணம் காட்டுகிறார். அய்யாவை விட அந்த அம்மா மோசமானவர் என்கிறார். அதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்கள். 

இது எப்படி இருக்கிறதென்றால் தாடிக்கொரு சீயாக்காய் தலைக்கு ஒரு சீயாக்காய் வைத்துக் கொள்ளலாம் என்பது போல இருக்கிறது 

காங்கிரஸ் இந்திய தேசியம் பேசும் கட்சி. அந்தக் கட்சி அப்படித்தான் நடந்து கொள்ளும். ஆனால் திமுக அப்படியல்லவே? 

எங்களுக்கு அயலார் உதவி செய்யவில்லை என்றால் கோபித்துப் பயனில்லை. ஆனால் உற்றார் உறவினர் உதவிசெய்யவில்லை 
என்றால் அவர்கள் மீது கோபம் வரத்தானே செய்யும்? 

திராவிட தேசியம் பேசிய திமுக உதவி செய்யும் நிலையில் இருந்தும் உதவி செய்யாது விட்டதுதான் பெரிய இரண்டகம். வரலாற்றுத் தவறு. அதற்கு மன்னிப்பே கிடையாது. 

முள்ளிவாய்க்காலில் குருதி வாடை வீசிக் கொண்டிருக்கும் போது தில்லி சென்று கூடாரம் அடித்து தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அமைச்சர் பதவிகள் பெறுவதற்கு காங்கிரசிடம் கருணாநிதியிடம் வரம் கிடந்தாரே இதைவிடவா செல்வி ஜெயலலிதா மோசமாக நடந்து கொள்வார்? அமைச்சர் பதவிகள் இல்லை என்றால் கருணாநிதி சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார். 

மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தன. ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கருணாநிதி கோபம் காட்டவில்லை. “மத்திய அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகிறதுஎன்றுதானே முகாரி பாடினார்? தமிழகத்தில் முத்துக்குமாரன் தீக்குளித்த போது அவருக்கு வீட்டுச் சிக்கல். அதனால்தான் தீமூட்டி இறந்தார்என்று கருணாநிதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினார்! 

இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றித் தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் குருதி சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார். 

சினிமா மோகத்திலும், அரசியல் சகதிக்குள்ளும் சிக்காத தமிழ் உணர்வாளர்கள் பொங்கி எழுந்தபோது, சோனியாவிற்கும் மன்மோகன் சிங்கிற்கும் எழுதிய கடிதங்கள் எவ்வளவு அற்புதமானவை என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன? அவையும் நாளை நெஞ்சுக்கு நீதியாகி, கருணாநிதியின் கல்லாப் பெட்டியை நிறைத்தாலும் வியப்பில்லை! 

ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் நாற்காலியில் கருணாநிதியைத் தவிர யார் இருந்திருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள். 

சென்னை மரீனா கடற்கரையில் காலை உணவை முடித்துக் கொண்ட பின்னர் தலைமாட்டில் மனைவியும், கால்மாட்டில் துணைவியுமாக அண்ணா சிலையருகே உண்ணா நோன்பு இருந்து பின் மதிய உணவுக்கு நோன்பை முடித்துக் கொண்ட நடிப்பை அல்லது கோமாளித்தனத்தை வேறுயாராவது மிஞ்ச முடியுமா? இதை வைத்துத்தான் சிறீலங்காவின் பாதுகாப்பு செயலர் அமைச்சர் கோத்தபாயாதமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நல்ல கோமாளிகள்என்று சொன்னான். அதையிட்டு கருணாநிதி வாய் திறக்கவில்லை. அதன் பொருள்ஆமாம் நாங்கள் அரசியல் கோமாளிகள்தான்என்று மறைமுகமாகச் சொன்ன மாதிரி இருந்தது. 

அதன் பின்னர்தான் முள்ளிவாய்க்காலில் அத்தனை அவலங்களும் நடந்தேறியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். உயிரோடு புதைக்கப்பட்டார்கள். எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் கைதிகளாக்கப்பட்டு வவுனியாவில் அமைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டார்கள். அப்போதும் கருணாநிதி என்ன சொன்னார்? அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது என்று சொன்னார்! 

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கவேண்டும்’ ‘ ‘தமிழா! தமிழா!! என்னைக் கட்டிக் கடலில் போட்டாலும், நான் கட்டுமரமாக மிதப்பேன். அதில் ஏறி நீ பயணம் செய்யலாம்என்ற பல்லக்குப் பேச்சிற்கு மட்டும் குறைவில்லை. ஆனால் சிங்கள இராணுவம் தமிழீழ மக்கள்மீது தமிழின அழிப்பு யுத்தத்தை மேற்கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த காலத்தில், அந்த வேதனை தெரியாத வகையில்மானாட மயிலாடவழங்கி மகத்தான தமிழ்ப் பணி ஆற்றிய ஒரே மனிதர் கருணாநிதிதான். 

தொடக்கத்தில் ஜெயலலிதா பிரபாகரனுக்கு ஒன்று நடந்தால் தமிழகம் கிளம்பி எழும் என்று பேசினார். பின் அவரது பாப்பாத்தி உணர்வு திராவிட பேசிய உணர்வை மழுங்கடித்து விட்டது. “அப்போது நான் கட்சிக்குப் புதிது. கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைப் படி அப்படிப் பேசினேன். இப்போது நிலைமை அப்படியில்லைஎன்று தனது புலி எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு நியாயம் கற்பித்தார். அதாவது சோ இராமசாமி, இந்து இராம், அரசியல் கோமாளி சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது வழிகாட்டல் படி புலி எதிர்ப்பாளனாக மாறினார். 

ஜெயலலிதா தமிழீழம் பற்றி சொல்லியதை பட்டியல் இட்டுள்ளீர்கள். மெத்த நல்லது. அம்மா சொன்னதை பட்டியல் போட்ட நீங்கள் அய்யா சொல்லியதை ஏன் பட்டியல் போடவில்லை? மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் தங்கம் என்பதா? 

கருணாநிதி தொடக்க முதல் தலைவர் பிரபாகரனை தனதுதமிழினத் தலைவர்பட்டத்துக்கு ஆபத்தான மனிதர் என்றே பார்த்தார். அதுதான்அந்தப் பயல் (சொல்லாட்சியைக் கவனியுங்கள்) தன்னை என்ன தமிழினத் தலைவன் என்றா நினைக்கிறான்என்று கேட்டிருக்கிறார். 

தமிழீழ கோரிக்கை பற்றி கருணாநிதி எத்தனை குத்துக்கரணங்கள் அடித்தார் என்பதற்கு பட்டியல் போட்டால் அது எத்தனை பக்கம் நீளும்? 

1.
நான் வன்முறையை ஆதரிக்கமாட்டேன். அதாவது தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க மாட்டேன். 

2. இது சகோதர யுத்தம். புலிகள் அதைத்தான் செய்கிறார்கள். அதாவது எனது அன்புக்குரிய ரெலோ தலைவர் சபாரத்தினத்தை கொன்றவர்கள் புலிகள். ரெலோ தலைவர் றோவின் ஆணைப்படி புலிகளைக் கொல்ல அணியமாகிக் கொண்டிருந்தார்கள். அதனை அறிந்த புலிகள் முந்திக் கொண்டார்கள். அதுதான் நடந்தது. 

3. ஈழம் விடுதலை அடைந்தால் அதையிட்டு மகிழ்ச்சி அடையும் முதல் ஆள் நான்தான். அதாவது பிள்ளைக்குத் திருமணம் செய்து வைக்க மாட்டேன். ஆனால் பேரன் பிறந்தால் உச்சி மோந்து கொஞ்சி மகிழ்வேன்! 

4. ஸ்ரீலங்கா அரசு இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கு கூடிய உரிமைகள் வழங்க வேண்டும் இல்லையேல் செக்சிலோவக்கிய குடியரசுகள் அமைதியாகப் பிரிந்து தனிவழி போனதுபோல சிங்களவரும் தமிழரும் பிரிந்து தனிநாடு காண்பதே சரியான வழி என்று சொன்னவரும் கருணாநிதிதான். இதைத்தான் இரட்டை நாக்குடையாய் போற்றி என்று பேரறிஞர் அண்ணர் வருணித்தார்! 

ஜெயலலிதா தடா சட்டத்தின் கீழ் வைகோ, நெடுமாறன், சுப.வீ போன்றோரை அடைத்தவர் என நீங்கள் சுட்டிக் காட்டுகிறீர்கள். உண்மை. அதை யாரும் மறைக்கவில்லை. எட்டிப் பழம் இனிக்கும் என்று யாரும் சொல்லவில்லை. 

ஆனால் கருணாநிதியின் யோக்கியதை என்ன? எழுபது போராளிகளை ஆண்டுக்கணக்காக சிறப்பு முகாம் என்ற அலங்காரச் சிறைகளில் வைத்து உள்ளாரே? எவர் மீதும் இதுவரை குற்றச்சாட்டும் இல்லை வழக்கும் இல்லை? இதுதான் தமிழினத்தலைவரின் இலக்கணமா? 

எங்களை விடுங்கள். தமிழக மீனவர்கள் 550 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்களே? என்ன செய்தார் கருணாநிதி? பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா என்று முழங்கிக் கொண்டு தில்லியோடு சண்டைக்குப் போனாரா? இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த இனத்தவருக்கு இந்த இழப்பு ஏற்பட்டிருந்தால் அவர்கள் சும்மா இருந்திருப்பார்களா? 

மகாராஷ்ட்ராவில் கார் ஓட்டிப் பிழைக்க வேண்டுமானால் மராத்தியனாகத் தான் இருக்கவேண்டும். மராத்தி மொழியில் எழுத படிக்கத் தெரிந்தால் தான் வண்டி ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று இந்தியாவின் தேசிய பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் ஆட்சியாளர் போட்ட சட்டம் இயற்றியது. மும்பையில், பல்வேறு மையங்களில் புகைவண்டி வேலைக்கான தேர்வு நடைபெற்ற போது ஏராளமான பீகார் மாநில இளைஞர்கள் கலந்துகொண்டனர். தேர்வு மையங்களுக்குள் அதிரடியாக நுழைந்த மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா தொண்டர்கள் வடஇந்திய இளைஞர்களின் விடைத்தாள்களை கிழித்தெறிந்தனர். அவர்கள் தேர்வு மையத்தை விட்டு ஓட ஓட விரட்டப்பட்டனர். இதில் பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டார். அதை எதிர்த்து நிதிஷ்குமாரும் லாலு பிரசாத்தும் எப்படிக் கொதித்து எழுந்தார்கள்? மும்பை போவதற்கு விசா வாங்க வேண்டுமா என்று கேட்டார்கள். அவர்களோடு கருணாநிதியை ஒப்பிட முடியுமா? கருணாநிதிக்கு சூடு, சொரணை, மானம், மரியாதை கொஞ்சமும் இல்லாது இருக்கிறதே? பதவி தோளில் போடும் துண்டு கொள்கை கட்டிக் கொள்ளும் வேட்டி என்றெல்லாம் பேசிய வாயல்லவா கருணாநிதியின் வாய்? இன்று ஏன் அது அடைபட்டுப் போயிற்று? 

இந்திரா காந்தியைக் கொன்றவர்களை மாவீரர்களாக்கி சீக்கிய பொற்கோவிலில் படமாகத் தொங்கவிட்டுள்ளார்கள் சீக்கியர்கள். சீக்கிய பொற் கோயிலுக்குப் போகிறவர்கள் அவர்களையும் வணங்கி விட்டுத்தான் போகிறார்கள். அந்தத் துணிச்சல் கருணாநிதிக்கு உண்டா? அவர் உடலில் ஓடுவது குருதியா? சாக்கடை நீரா? 

கவிஞர் தாமரை அவர்களே! பாரதியின் பாஞ்சாலி சபதம் படித்திருப்பீர்களே? அதில் ஒரு காட்சி. 

சகுனியின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு சூதாட்டத்தில் தோற்ற தருமன் தம்பியரைப் பணயம் வைத்து, அவர்களையும் இழந்த பின் தன்னையே பணயமென வைத்து அதிலும் தோற்றுப் போனான். 

அடுத்து பணயமாகத் தருமன் தன் மனைவி பாஞ்சாலியையே வைக்கத் துணிந்தபோது அவள் அழகையும் சிறப்பையும் பாரதியார் வர்ணிக்கும் பாங்கே பரவசமூட்டக் கூடியது எனினும் பரிதாபத்திற்குரியதுமாகும். 

என் செய்வது? தருமன் தான் முன்பே தடம் மாறி, தன் மனைவியாம் பாஞ்சாலியையும் பணயம் வைத்துப் பகடை உருட்டச் சம்மதித்துவிட்டானே! 
இந்தச் செய்தி, பாஞ்சாலிக்குக் கிடைத்தவுடன் அவள் எப்படிச் சினந்தாள்; சீறினாள் என்பதை பாரதியார் பாடுகிற பாங்கு அந்தப் பெண்ணின் உள்ளத்தில் எத்தகைய பெருந்தீ எழுந்தது என்பதைக் காட்டுகிறது.
கணவன் விலை போய் விட்டான். அவனே விலை போன பிறகு; என்னைப் பந்தயத்தில் பணயம் வைத்துச் சூதாடுவதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேட்கிறாள் பாஞ்சாலி! 
பரிதாபத்திற்குரிய பாஞ்சாலி போன்ற ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை வெளிப்படுத்தினாலும் தனக்காகப் போராடக் கூடிய தகுதியுடைவன் தனக்கு முன்பே விலை போய் விட்டானே என்று பாஞ்சாலி குமுறித் துடிப்பதுதான் பாரதி எழுதிய பாஞ்சாலி சபதப் பாடல் வரிகளிலேயே சூடு பறக்கும் சுவையான வரிகளாகும். சுயமரியாதை உணர்வு கொண்ட ஒரு பெண்ணின் உரிமை முழக்கமும் ஆகும். பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்த போது தருமன், வீமன், அருச்சுனன் என்ன செய்தார்கள்?  

நாமும் ஒரு சூளுரை எடுத்துக் கொள்வோம். தமிழினத்தைக் காட்டிக் கொடுத்து அந்த இனத்தை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்ற கருணாநிதியை ஆட்சிக் கட்டிலில் 
இருந்து அகற்றுவோம். அதுவரை விழி மூடோம்! கண் துஞ்சோம் கருமமே கண்ணாய் இருப்போம். வருகிற தேர்தல் நல்ல வாய்ப்பு. அதனை நழுவ விடுவோமா? 

நான்கு எதிரிகள் இருக்கும் போது மூன்று எதிரிகளோடு கூட்டுச் சேர்ந்து முதலாவது எதிரியை முறியடிப்பதுதான் இராசதந்திரம். மூன்று எதிரிகளோடு சேர்ந்து இரண்டாவது எதிரியை 
வீழ்த்துவோம். இரண்டு எதிரிகளோடு சேர்ந்து மூன்றாவது எதிரியை தோற்கடிப்போம். நான்காவது எதிரியை நாமே தோற்கடிப்போம். தோற்கடிக்க முடியாவிட்டால் நாம் எதற்கும் 
தகுதியில்லாதவர்கள்! இது லெனின் சொன்னது. இதைத்தான் நம்ம பெரியார் சொன்னார். “பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி! அப்புறம் பாம்மை அடி என்று சொன்னார். 

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் 
துணைவலியும் தூக்கிச் செயல். (குறள் 471) 

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும் இந்தக் குறள் 
சீமானுக்குத் தெரியும். அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்குக் கைகொடுப்போம். அவரோடு கை சேர்ப்போம். இடித்துரைக்கும் அமைச்சர் போல் செயல்படுவோம். 

தோழமையுடன் 

நக்கீரன் 


No comments:

Post a Comment